திமுகவின் இளைஞரணி செயலாளராக ஆவதை காலம்தான் பதில் சொல்லும் என்று நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு ‘காமதேனு’ வார இதழில் பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில், அப்பா ஸ்டாலின் பாணியில் திமுக இளைஞரணி செயலாளர் ஆவீர்களா என்ற கேள்விக்கு, மேற்கொண்டவாறு பதில் அளித்திருக்கிறார் உதயநிதி. மேலும் “அதற்கு கட்சிக்காக இன்னும் நிறைய உழைக்க வேண்டும்” என்றும் தெரிவித்திருக்கிறார். 

திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் கிராம ஊராட்சி சபை கூட்டங்களில் பங்கேற்பதாக சர்ச்சை எழுகிறதே என்ற கேள்விக்கு, “பொறுப்பு கொடுத்தால்தான் கட்சிக்காக வேலை செய்யணுமா? மக்களைச் சந்திக்கணுமா? நான் கட்சியில் பொறுப்பு இல்லாமல் இருக்கிறப்பயே இவ்வளவு விமர்சனங்கள், கேள்விகள் வருதே. நான் திமுகவின் அடிப்படை உறுப்பினர். ஆதாரம் காட்டட்டுமா? எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே நான் திமுகக்காரன்” என்று உதயநிதி தெரிவித்திருக்கிறார். 

 நாடாளுமன்றத் தேர்தல் அல்லது இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருக்கா என்ற கேள்விக்கும் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்திருக்கிறார்.  “இப்போதைக்கு அந்த எண்ணமில்லை. ஆனால், கண்டிப்பாக மக்களவைத் தேர்தலில் திமுகவுக்காகப் பிரசாரம் செய்வேன். தவிர, திமுகவைப் பொறுத்தவரையில் நான் போட்டியிடுகிறேன் என்று தன்னிச்சையாக யாரும் எந்த முடிவும் எடுக்க முடியாது. அதைக் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்” என்று தெளிப்படுத்தியிருக்கிறார். 

வருங்கால முதல்வராகும் யோகம் இருப்பதால்தான் உங்கள உங்கள் அம்மா அரசியலில் இறக்கிவிட சம்மதிச்சதா ஒரு பேச்சு ஓடுதே என்ற கேள்விக்கு கோபமாகப் பதில் கூறிய உதயநிதி, “எனக்கு ஜாதகம், ஜோதிடத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் பகுத்தறிவாதி. அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை இருப்பது உண்மை. முதலில் நான் சினிமாவில் நடிப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை. இப்போ பிடிச்சிருக்கு. இப்போ நான் எந்தப் படத்தில் நடிச்சாலும் சூப்பர் என்கிறார். சினிமாவில் நடிச்சாலும் அப்பாவுக்கு துணையா இருக்கணும்னு அம்மா விரும்புறாங்க. அவ்ளோதான்” என்று தெரிவித்திருக்கிறார். இதுபோல மேலும் பல கேள்விகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்திருக்கிறார்.