பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு வரும் அக்டோபர் 11 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த சந்திப்பில் இருநாட்டு வர்த்தக உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேசலாம் என்று கூறப்படுகிறது. சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக பனிப் போர் நடந்து வரும் நிலையில்  இந்த சந்திப்பு நடக்க இருக்கிறது.

 

அப்போது நடக்கும் விருந்தில் கலந்து கொள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், இந்த விருந்தில் கலந்து கொள்வதா? வேண்டாமா? என்பது குறித்து இன்னும் திமுக தலைமை முடிவு செய்யவில்லை. தமிழகத்தில் பொதுவாக பாஜகவுக்கும், மோடிக்கும் எதிர்ப்பு அலை இருக்கும்போது அதுபோன்ற நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுமா என்று தலைமை நினைப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு மட்டுமே அழைப்பு விடப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலக அழைப்பை ஏற்று விருந்தில் கலந்து கொள்வதா? வேண்டாமா? என யோசிக்கும் ஸ்டாலினுக்கு மற்றுமொரு பிரச்சனையும் தலை தூக்கியுள்ளது. மக்களவையில் இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை தற்போது திமுக பெற்றுள்ளது.

2014- 2019ல் மக்களவையில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக இருந்தது. அப்போது, மக்களவை துணை சபாநயாகர் பொறுப்பு அதிமுகவுக்கு வழங்கப்பட்டது. தம்பிதுரை துணை சபாநாயகராக பொறுப்பு வகித்தார். இதேபோன்ற வாய்ப்பு தற்போது திமுகவுக்கு கிடைத்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக அந்தப் பதவியும் காலியாக இருக்கிறது. திமுகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால், இன்னும் ஸ்டாலின் அதுகுறித்து முடிவு எடுக்கவில்லை.

துணை சபாநாயகர் பொறுப்பை ஏற்றால், பாஜகவுடன் திமுக இணக்கமாக செல்கிறது என்ற வதந்தி பரப்பப்படும். இது தனது எதிர்கால அரசியலை பாதிக்கும் என்று திமுக கருதுகிறது. ஆகையால்  இந்த விஷயத்தில் இன்னும் ஸ்டாலின் முடிவு எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  அப்படி முடிவு எடுக்குபோது, அந்த வாய்ப்பு டி.ஆர். பாலு, அ. ராசா, எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அல்லது தயாநிதி மாறனுக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஒரு பக்கம் மத்தியில் அதிகார வட்டாரத்திற்குள் செல்ல வேண்டாம் என்று ஸ்டாலின் நினைப்பதாகவும், அப்படி துணை சபாநாயகர் பதவியை ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் காவி கட்சி என்று திமுகவையும் வர்ணிப்பார்கள் என்று திமுக தலைமை கருதுவதாக கூறப்படுகிறது.

இந்தி மொழியை நாட்டில் அனைவரும் படிக்க வேண்டும். அப்போதுதான் ஐநா இந்தி மொழியை அங்கீகரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி இருந்தார். இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அமித் ஷாவின் பேச்சைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக திமுக அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திமுக தலைவர் ஸ்டாலினை வரவழைத்து இந்தியை திணிப்பதாக அமித் ஷா பேசவில்லை என்று விளக்கம் அளித்து இருந்தார்.

இதையடுத்து போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக ஆளுநர் சந்திப்பிற்குப் பின்னர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பிரதமர், சீன அதிபர் இருவரும் கலந்து கொள்ளும் விருந்தில் ஸ்டாலின் கலந்து கொள்வாரா என்பது இன்னும் இறுதியாகவில்லை.