இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி 834 பேர் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக  நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு சார்பாக நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டாலும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக சார்பாகவும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திமுக மகளிர் அணி சார்பாக ஊராட்சி பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையில்  தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் ஆபரேட்டர்கள், ஊராட்சி பணியாளர்கள் என ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள் அனைவருக்கும் திமுக மகளிர் அணி சார்பாக மளிகை பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பாக மாவட்ட அமைப்பாளர் கவிதா தண்டபாணி தனது சொந்த செலவில் ஒரு லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள், முகக் கவசங்கள், கையுறைகள் உள்ளிட்டவற்றை அடங்கிய தொகுப்பை பணியாளர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களுக்கு உதவும் பணியை மகளிர் அணி சார்பாக மாவட்ட அமைப்பாளர் கவிதா தண்டபாணி மேற்கொண்டு வருகிறார். இவர் கடந்த 2016ம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு அமைச்சர் கே.சி.வீரமணியிடம் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.