தமிழகத்தில் திமுக என்றைக்குமே கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வராது என்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்பு காரணமாக கோபமடைந்த டிடிவி தினகரன் அணியினர், கடந்த 22 ஆம் தேதி சென்னை, ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி, ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் எழுதி இருந்தார். 

ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை திரும்பியுள்ள நிலையில், எதிர்கட்சியினர் அவரை இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி எதிர்கட்சியைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆளுநரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

ஆளுநரும் இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார்.

திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி திமுக உறுப்பினர்கள் கூட்டணி கட்சியினர், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முறையிட்டுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்கட்சிகளின் கடிதம் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ், விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடியரசு தலைவரைச் சந்தித்து இது குறித்து முறையிடுவோம் என்றார்.

அதிமுக அரசு இன்னும் ஒரு மாதத்தில் கவிழப்போகிறது. தமிழகத்தில் திமுக என்றைக்குமே கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வராது என்றும் மு.க.ஸ்டாலின் அப்போது பேசினார்.