எடப்பாடி ஆட்சியை மு.க.ஸ்டாலின் கலைக்க நினைத்தால் தி.மு.க.வையே இரண்டாகப் பிரித்துவிடுவோம் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அ.தி.மு.க. ஆட்சியின் நிழலைகூட ஸ்டாலினால் தொட முடியாது. தொடலாம் என நினைத்தாலே அவர் கட்சிக்குதான் ஆபத்து. ஸ்டாலினுக்கு எதை கண்டாலும் பயம். அவருடைய நிழலை பார்த்து அவரே பயப்படுகிறார். நாங்கள் ஒன்றும் குமாரசாமி கிடையாது. இங்கே அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் வலுவாக உள்ளனர். இங்கு சலசலப்பு கிடையாது. எல்லோரும் கலகலப்பாக இருக்கின்றனர். 

தி.மு.க வெறும் பானை. ஆனால், அ.தி.மு.க பொங்கல் பானை. தி.மு.க தன்னுடைய கட்சியை எப்படி வேண்டுமானாலும் உருட்டிக்கொள்ளலாம். ஆனால், அ.தி.மு.க-வை அசைக்ககூட முடியாது. தமிழ் வளர்ச்சிக்காகத் தி.மு.க எதையும் செய்யவில்லை. தமிழ்மொழியை விற்றுப் பிழைத்தவர்கள் அவர்கள். தமிழர்களின் உரிமையைப் பற்றிப் பேச தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த தகுதியும் கிடையாது. 

அ.தி.மு.க. ஆட்சியை கலைப்பதற்கு தி.மு.க.வுடன் கைகோர்த்தது தினகரன்தான். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது என்றார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.