காவிரி நதிநீர் பங்கீடு விவகரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட, அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவிரிநதிநீர் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், திமுக, மதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

காவிரி விவகாரத்தில் அரசு தொடர் நடவடிக்கைகளை விரைவாகவும், உறுதியாகவும் எடுக்க அனைவரது ஆலோசனைகளும் தேவை. அனைத்து கட்சி தலைவர்கள் தங்களது ஆலோசனையை வழங்க வேண்டும் என்று அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.

அப்போது பேசிய திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரததில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் திமுக துணை நிற்கும் என்றார். நீர்ப்பாசனத்தைப் பொதுப்பணி துறையில் இருந்து பிரித்து புதிய அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்றார். நீர் பாதுகாப்பு ஆணையம் அமைத்து நீர்வளத்தை சேமிப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தேவை. குறைக்கப்பட்டுள்ள 14 டி.எம்.சி. நீரைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை யோசிக்க வேண்டும் என்று அப்போது தெரிவித்தார்.

மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொது செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.