தேர்தலுக்காக, நீட் தேர்வை வைத்து திமுகவினர் தேவையில்லாமல் அரசியல் செய்து வருகிறார்கள். இந்தத் தேர்தல் முடிந்தபிறகு அவர்கள் தூங்கபோய்விடுவார்கள். பிறகு, நாடாளுமன்ற தேர்தல் 2024-இல் வரும்போது ஜனவரியில் மீண்டும் பேசுவார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எந்த அர்த்தத்தில் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மாநில தலைவர் அண்ணாமலை கோவைக்கு வந்திருந்தார். பிரசாரத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சித்தாந்த ரீதியாக பாஜக - திமுக இடையே நேரடி கருத்து மோதல் உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய பிரச்சாரத்தில் 80 சதவீதம் பாஜகவை தாக்கிதான் பேசுகிறார். எனவே, இந்தத் தேர்தல் களம் கருத்தியல் அடிப்படையில் திமுகவா பாஜகாவா என்றுதான் சென்றுகொண்டிருக்கிறது. பாஜகவை பொருத்தவரை தேசிய அளவில் உள்ளாட்சி தேர்தலில் எங்கேயும் கூட்டணி வைத்துக்கொள்வதில்லை. இத்தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் சேவகர்களாக மாற கட்சியினருக்கு இது ஒரு வாய்ப்பு என்பதால் தனித்து போட்டியிடுகிறோம்.
தேர்தலில் எல்லோருக்கும் வாய்ப்பளிக்க அதிக இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவது எங்கள் எண்ணமாக இருந்தது. ஆனால், கூட்டணியில் அதிமுக எங்களுக்கு 10 சதவீத இடங்களைத்தான் ஒதுக்கியது. அதேவேளையில், உள்ளாட்சிகளுக்கு வரும் நிதியில் 85 சதவீதம் மத்திய அரசு அளிப்பதுதான். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசு பெரிய அளவில் நிதி அளிப்பது இல்லை. உள்ளாட்சியில் எல்லாருமே பாஜக அரசின் பயனாளிகள்தான். எனவே, மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களை எல்லாம் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும் எங்களிடம் உள்ளது. அதனால்தான், தனித்து போட்டியிட முடிவு செய்தோம். 21 மாநகராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர் பதவிக்கான இடங்களில் தற்போது 89 சதவீத இடங்களில் பாஜக போட்டியிடுகிறது.
மேற்கு வங்க ஆளுநரின் உத்தரவை பலர் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டப்படி மாநிலத்தில், மாநில அரசுக்குதான் அதிக அதிகாரம் உள்ளது. மாநில அரசோடு இணைந்துதான் ஆளுநர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். நிறைய இடங்களில் மாறுபட்ட கருத்துகள் வரும்போது மேற்குவங்க ஆளுநர் பொதுவெளியில் வெளிப்படையாக பேசுகிறார். இதை ஒரு ஆரோக்கியமான அரசியலாகத்தான் நான் பார்க்கிறேன். தேர்தலுக்காக, நீட் தேர்வை வைத்து திமுகவினர் தேவையில்லாமல் அரசியல் செய்து வருகிறார்கள். இந்தத் தேர்தல் முடிந்தபிறகு அவர்கள் தூங்கபோய்விடுவார்கள். பிறகு, நாடாளுமன்ற தேர்தல் 2024-இல் வரும்போது ஜனவரியில் மீண்டும் பேசுவார்கள். நீட் விவகாரத்தில் தேவை இல்லாமல் தமிழக ஆளுநரை வம்பிழுத்து அவருடைய மாண்பை குறைத்துள்ளனர்.

2024-ஆம் ஆண்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமலாகுமா என்றால், எந்த மாநிலத்திலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேர்தல் நடக்கலாம். அது, மாநில அரசுகள் எப்படி செயலாற்றுகிறார்கள். மக்களிடையே எப்படி திட்டங்களை கொண்டு சேர்க்கின்றனர். சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாக்கின்றனர். அரசியலமைப்புச் சட்டத்தை எப்படி பின்பற்றுகிறார்கள் என்பதை பொருத்ததுதான் அமையும். இது முழுவதும் மாநில அரசின் கையில்தான் இருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை பொருத்தவரை மத்திய அரசின் கொள்கை முடிவுக்காக காத்திருக்க வேண்டும். இதை ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் எந்த அர்த்தத்தில் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், மாநிலத்தில் வேகமாக தேர்தல் நடத்த விரும்புகிறார்களா அல்லது முறையாக இந்த ஆட்சிகாலத்தை முடிக்கப்போகிறார்களா என்பது மாநில அரசின் கையில்தான் உள்ளது” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
