கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதற்கான அரசாணையை மத்திய பாஜக அரசுதான் பிறப்பித்தது என்பதை மறுத்துவிட முடியுமா ஸ்டாலினால்? ஒரு பொய்யை நூறு முறை கூறினால் அது உண்மையாகி விடும் என்று சொல்லப்படும் கதையை உண்மையென்று நம்பி, ஸ்டாலின் இட ஒதுக்கீட்டின் சரித்திரத்தை மாற்றி பெருமை தேடி கொள்ள பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இட ஒதுக்கீட்டை மறந்த திமுக, இட ஒதுக்கீட்டை மறுத்த, எதிர்த்த, வெறுத்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரை சமூக நீதிக்காக குரல் கொடுக்குமாறு அழைப்பது வரலாற்று பிழை மட்டுமல்ல என்பதோடு, இரட்டை வேடத்தோடு கூடிய போலி நாடகத்தை அரங்கேற்ற முனைகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதே உண்மை என்று பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாம் எந்த நம்பிக்கையோடும், நோக்கத்தோடும் மண்டல் ஆணையத்தை நிறுவினோமோ அதே நோக்கத்தோடு இணைய வேண்டும்" என்று சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பு என்ற அமைப்பில் இணையுமாறு 37 கட்சிகளின் கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். நீண்ட அரசியல் அனுபவம் வாய்ந்த ஸ்டாலினின் இந்த கடிதமானது வியப்பை அளிக்கிறது. மண்டல் ஆணையத்தை நிறுவியதற்கும், இந்தக் கடிதத்தை எழுதியுள்ள ஸ்டாலினின் திமுகவுக்கும், இந்தக் கடிதத்தை அனுப்பியதாக குறிப்பிட்டுள்ள சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அறிந்தும், வரலாற்றை திருத்தி உண்மைக்கு புறம்பான தகவலை அளித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. 1979-ஆம் ஆண்டு பாஜகவின் நிறுவன தலைவர்களான வாஜ்பாயும் அத்வானியும் அமைச்சர்களாக அங்கம் வகித்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியில்தான் மண்டல் ஆணையம் நிறுவப்பட்டது, அந்த நேரத்தில் திமுக - காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்ததையும் மறைத்து அல்லது மறந்து எழுதியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். 

அதே போல், 1980-ம் ஆண்டே மண்டல் ஆணைய பரிந்துரைகள் அரசுக்கு அளிக்கப்பட்ட நிலையிலும் 1984 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடன், திமுக கூட்டணியில் இருந்தும், மண்டல் ஆணையத்தை நிறுவாதது ஏன் என்ற கேள்விக்கு ஸ்டாலின் பதில் சொல்வாரா? 9 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், மண்டல் ஆணையத்தை கிடப்பில் போட்டதை ஸ்டாலின் மறைத்ததின் காரணம் என்ன? 1989 பாராளுமன்ற தேர்தலில் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மண்டல் ஆணைய பரிந்துரையை அமல்படுத்துவோம்' என்ற தேர்தல் வாக்குறுதியை அளித்த ஒரே கட்சி பாஜகதான். பாஜக ஆதரவு பெற்றதாலேயே விபிசிங் அரசு மண்டல் ஆணையத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து சட்டமாக்க முடிந்தது என்பதை ஸ்டாலினால் மறுக்க முடியுமா? அல்லது 'இட ஒதுக்கீடு தேசத்தை பிளக்கும்' என பாராளுமன்றத்தில் மண்டல் ஆணைய இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து இரண்டரை மணி நேரம் வாதம் செய்து, அச்சட்டத்தை எதிர்த்தது அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தி என்பதை மறந்து விட்டு அவரின் மனைவி சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளாரா ஸ்டாலின்? 

மண்டல் ஆணையம் நிறுவப்பட்டதையும், மண்டல் ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்துவதையும், கடுமையாக எதிர்த்ததோடு, தாங்கள் ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டவர்களே இல்லை என்று கூறி, 'இட ஒதுக்கீடே வேண்டாம்' என்று கூறியது, இன்று திமுகவுடன் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிதான் என்பதை மறந்து விட்டாரா ஸ்டாலின்? மேலும், இன்றைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ள பல கட்சிகளின் தலைவர்கள் மண்டல் ஆணைய பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டபோது அதை கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார்கள் என்பதை ஸ்டாலின் மறந்து விட்டாரா? அல்லது மறைக்க முயற்சி செய்கிறாரா? அதே போல், மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் திமுக தொடுத்த வழக்கினால்தான் 27% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளது 'முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியே'. காங்கிரஸ் கூட்டணியில் 10 வருடங்கள் ஆட்சியில் இருந்தபோதே இந்த இட ஒதுக்கீட்டை கொண்டு வராதது ஏன் என்பதை ஸ்டாலின் விளக்குவாரா?



உச்ச நீதிமன்றத்தில் 2016-ம் ஆண்டு சலோனி குமாரி வழக்கில் இப்போதைய பாஜக அரசுதான் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க தயார் என்று அறிவித்ததை ஸ்டாலின் மறைப்பது ஏன்? மேலும், சமீபத்தில் இது குறித்த வழக்கில் மத்திய பாஜக அரசு 27% இட ஒதுக்கீட்டை வழங்க தயார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையிலேயே இது சாத்தியமானது என்பதை மறைக்க பார்ப்பது ஏன்? கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதற்கான அரசாணையை மத்திய பாஜக அரசுதான் பிறப்பித்தது என்பதை மறுத்துவிட முடியுமா ஸ்டாலினால்? ஒரு பொய்யை நூறு முறை கூறினால் அது உண்மையாகி விடும் என்று சொல்லப்படும் கதையை உண்மையென்று நம்பி, ஸ்டாலின் இட ஒதுக்கீட்டின் சரித்திரத்தை மாற்றி பெருமை தேடி கொள்ள பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசியல் அதிகாரத்திற்காக இட ஒதுக்கீட்டை மறந்த திமுக, இட ஒதுக்கீட்டை மறுத்த, எதிர்த்த, வெறுத்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரை சமூக நீதிக்காக குரல் கொடுக்குமாறு அழைப்பது வரலாற்று பிழை மட்டுமல்ல என்பதோடு, இரட்டை வேடத்தோடு கூடிய போலி நாடகத்தை அரங்கேற்ற முனைகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதே உண்மை.” என்று அறிக்கையில் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்,