திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற்று மீண்டுவர வேண்டும் என திமுக தொண்டர் ஒருவர் மருத்துவமனை வாயிலில் மொட்டையடித்து வேண்டுதல் நடத்திவருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் விசாரித்து வருகின்றனர். 

நேற்றிரவு அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் தொடர் சிகிச்சையின் விளைவாக அவரது உடல்நிலை சீராகிவருவதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. உடல்நிலையில் பின்னடைவு என்றதும் மருத்துவமனையில் குவிந்திருந்த தொண்டர்கள், எழுந்து வா தலைவா என முழக்கமிட்டனர். 

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் அவர்களை சமாளிக்க போலீஸார் திணறினர். போலீஸாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் சிறியளவில் தடியடி நடத்தினர். மருத்துவமனையில் தொண்டர்கள் அசம்பாவிதங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தினார். 

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோர் கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்துள்ளதாக தெரிவித்தனர். எனினும் தொண்டர்கள் அங்கிருந்து செல்லாமல் விடிய விடிய காத்திருந்தனர். அதிகாலையில் சற்று கலைய தொடங்கினர். எனினும் விடிந்ததும் மீண்டும் தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர். எனவே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று காலை கீரனூரை சேர்ந்த வீரமணி என்ற திமுக தொண்டர், மருத்துவமனை வாயிலில் மொட்டையடித்து, கருணாநிதி உடல்நலம் பெற வேண்டும் வேண்டிவருகிறார். கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி கடந்த மூன்று நாட்களாக உண்ணாநிலை விரதம் இருந்து வருவதாக வீரமணி தெரிவித்துள்ளார். 

வீரமணி மொட்டையடிக்கும் போது எழுந்து வா தலைவா.. என மற்ற தொண்டர்கள் உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்த அடுத்த மருத்துவ அறிக்கைக்காக தொண்டர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.