ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வை கீழே வைத்துக் கொண்டு, மேடையில் தி.மு.க. வி.ஐ.பி. பேசிய ‘தாளிப்பு’ பேச்சு செம்ம பரபரப்பு. 

தி.மு.க.வின் முதன்மை செயலாளராக இருக்கும் டி.ஆர்.பாலு சமீபத்தில் பட்டுக்கோட்டை அருகிலுள்ள ஒரு கிராமத்தில்  ஒரு திருமண விழாவில்  கலந்து கொண்டார். அப்போது பட்டுக்கோட்டை தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான சேகரும் அங்கிருந்தார். கீழே சேகர் அமர்ந்திருக்க, மேடையில் கெத்தாக மைக் பிடித்த பாலு ஆளுங்கட்சியை கிழி கிழியென கிழித்துவிட்டார்...

“அ.தி.மு.க. சார்பாக அரை சதம் எம்.பி.க்கள் இருக்கிறார்கள். ஆனாலும் கஜா புயலுக்கான நிவாரண நிதியை மத்திய அரசிடம் கேட்டு வாங்க முடியவில்லை. இந்த மண்ணிலும், சுற்றுவட்டார கிராமங்களிலும் கோடீஸ்வரர்களாக வாழ்ந்தவர்கள் இன்று ஐந்தாயிரம், பத்தாயிரத்துக்கே கையேந்தி நிற்கிறார்கள். எங்கள் தலைவர் கருணாநிதி ஏழாயிரம் கோடி விவசாய கடனை சர்வசாதாரணமாக தள்ளுபடி செய்து ஏழை விவசாயிகளின் கண்ணீரை துடைத்தார். ஆனால் இவர்களின் ஆட்சியோ கண்ணீருக்கும் மேல் கண்ணீரை வர வைக்கிறது.” என்றவர், கடைசி பிட்டாக “இந்த டெல்டா மண் மீது எப்போதும் அதிக அக்கறை செலுத்துவது எங்கள் இயக்கம் மட்டும்தான்.” என்று முழங்கிவிட்டார். 

பாலு பேசி முடித்து கிளம்பிய பின், அடிபட்ட புலியாக எழுந்தார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மைக்கை பிடித்து போட்டு வெளுப்பார் தி.மு.க.வை என்று அவரது அடிப்பொடிகள் நினைத்தனர். 

ஆனால், மனிதர் மணமக்களை வாழ்த்திவிட்டு சைலண்டாக கிளம்பிவிட்டார். இன்னைக்கு செம்ம எண்டர்டெயின்மெண்ட் இருக்குது என்று காத்திருந்த மணமக்களும் கூட ஏமாந்துவிட்டனர். 

யார் மனசுல என்ன இருக்குதோ! யாருக்கு தெரியும்?