கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இந்த முறையும் தொகுதிக்காக திமுகவுடன் மல்லுக்கட்ட வேண்டிய நிலைக்கு விசிக ஆளாகியுள்ளது. 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் அரசியலில் 1999-ம் ஆண்டு காலடி எடுத்துவைத்தது. அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமாகவுடன் விசிக கூட்டணி அமைத்தது. திருமாவளவன் முதன்முறையாக சிதம்பரம்  தொகுதியில் போட்டியிட்டார். அப்போது 2.25 லட்சம் ஓட்டுகளை திருமாவளவன் பெற்றார். 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் அம்பு சின்னத்தில் போட்டியிட்டு சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் இரண்டரை லட்சம் வாக்குகளைப் பெற்றார். 


இதன் பிறகு பிறகு திமுக கூட்டணிக்கு வந்த விசிக, 2009-ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட்டது. திமுக - காங்கிரஸ் கட்சிகளுடன் மூன்றாவது கட்சியாக விசிக மட்டுமே கூட்டணியில் இருந்தது. 3 கட்சிகள் மட்டுமே திமுக கூட்டணியில் இருந்ததால், தொகுதி ஒதுக்கீட்டில் கருணாநிதி தாராளம் காட்டினார். காங்கிரஸுக்கு 15 தொகுதிகளை ஒதுக்கிய கருணாநிதி, விசிகவுக்கு விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளை வழங்கி, அக்கட்சிக்கு அங்கீகாரம் அளித்தார். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெற்ற நிலையில், விழுப்புரம் தொகுதியில் சுமார் 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் விசிக தோல்வியடைந்தது.
இருந்தாலும் அப்போது 2 தொகுதிகளை விசிகவுக்கு திமுக ஒதுக்கியது அரசியல் பார்வையாளர்களால் உற்று நோக்கப்பட்டது. ஆனால், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையில் விசிகவுக்கு கசப்புதான் ஏற்பட்டது. அப்போது தொகுதி ஒதுக்கீடு செய்யும் விவகாரங்களில் மு.க.ஸ்டாலின்தான் முடிவு எடுத்தார். அந்தத் தேர்தலில் திமுகவிடம் விசிக 2 தொகுதிகளை கேட்டது. ஆனால், சிதம்பரம் தொகுதி மட்டுமே திருமாவளவனுக்கு ஒதுக்கப்பட்டது. 2009 தேர்தலில் 2 தொகுதிகளை வழங்கிவிட்டு, இந்த முறை 1 தொகுதி மட்டுமே வழங்கப்பட்டது விசிக கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பிறகு ஓரிரு நாட்கள் கழித்து விசிகவுக்கு திருவள்ளூர் தொகுதியை ஒதுக்கியது திமுக. கருணாநிதி தலையீட்டின் பேரில் விசிகவுக்கு கூடுதலாக ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதாக அப்போது பேச்சு எழுந்தது.
இப்போதும் திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள விசிக, 2 தொகுதிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது. கடந்த தேர்தலைபோலவே இந்த முறையும் திமுக தரப்பில் ஒரு தொகுதி வழங்க முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் பாமக வரவுக்காக விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேசாமல் இருந்த திமுக, அந்தக் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்ததையடுத்து விசிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போது விஜயகாந்துக்காக இருக்கும் கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தையை இறுதி செய்யாமல் காலம் தாழ்த்திவருவதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
திமுகவின் இந்த அணுகுமுறை விசிகவினரை கோபம்கொள்ள வைத்துள்ளது. அதேவேளையில் கூட்டணி தர்மம் கருதி, வேறு வழியில்லாமல் விசிகவினர் பொறுமை காத்துவருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  2009, 2014-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களைப் போல இந்தத் தேர்தலிலும் மனமுவந்து விசிகவுக்கு இரண்டு தொகுதிகளை திமுக வழங்குமா என்ற கேள்விக்கும் பதில் இல்லை. என்றாலும், செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு இந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.