எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போல் அனைத்தையும் பெரிதாக்கும் வேலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

ராயபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் நடந்த நலத்திட்டம் வழங்கும் விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சரோஜா ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க.வின் நிலை பரிதாபமாக உள்ளது. அவர்கள் மெகா கூட்டணி என கூறினர். ஆனால், இன்று அவர்கள் நிலை அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. குடும்பத்தில் குழப்பம், கட்சியில் சீனியர்களை மதிக்காது, உதயநிதியை முன்னிலைப்படுத்திய நிலைகளால் தி.மு.க.வின் உள்ளடி வேலைகள் செய்தனர்.

விரைவில் தி.மு.க.வில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும். பொதுமக்கள் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த உண்மை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

 

2021-ல் அம்மாவின் ஆட்சியைதான் நாங்கள் அமைப்போம். மீனவர்களுக்கு சேட்டிலைட் போன் வழங்கும் திட்டம் தயாராக உள்ளது. இதில் மத்திய அரசு மாநில அரசு மற்றும் மீனவர்கள் பங்களிப்புடன் சேட்டிலைட் போன் விரைவில் வழங்க தயாராக உள்ளோம். மருத்துவர்கள் போராட்டம் தேவையற்றது. உடனே அவர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்பவேண்டும். கண்டிப்பாக அவர்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.