வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி இரண்டிலுமே மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் காடுவெட்டி ஜெ.குரு. அதிரடி அரசியல்தனத்தின் அட்சரம் பிசகாத எடுத்துக்காட்டாக விளங்கிய மனிதர். ஒரு உண்மையை சொல்வதானால் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இருவரையும் விட சில சதவீதம் தூக்கலாகவே குருவுக்கு ஆதரவு இருந்தது. 

இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் குரு இறந்துவிட்டார். உடல் நலக்குறைவால் நீண்ட நாட்கள் அவதிப்பட்டு மெதுவாக மெதுவாம அவர் உடல் நிலை தளர்ந்து இறந்தார். குருவின் மறைவுக்குப் பின் ராமதாஸ் குடும்பத்துக்கு எதிராகவே பா.ம.க.வின் சிறு பிரிவும், வன்னிய மக்களும் திரும்பினர். காரணம் குருவின் அம்மா, சகோதரி மற்றும் மகன் ஆகியோர் அவரது மரணத்துக்கு காரணம் ராமதாஸ் குடும்பமே! என்று ஒரு புகாரை கிளப்பியதுதான். ’ராமதாஸின் வீட்டில் ஒரு முறை விருந்துக்கு சென்று விட்டு வந்த பிறகுதான் குருவுக்கு உடல் நலன் சரியில்லாமல் போனது.  பிறகு படுக்கையில் பல நாட்களாக கிடந்து இறந்தார்.’ என்று ஆவேசப்பட்டனர். 

இந்த குற்றச்சாட்டால் துவக்கத்தில் நிலைதடுமாறியது ராமதாஸ் டீம். பின் சுதாரித்தனர். சமீபத்தில் குருவின் மகன் கனலரசன் ராமதாஸ் தரப்போடு இணைந்துவிட்டான். இந்த நிலையில், சென்னை -  கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் காடுவெட்டி குருவுக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை சமீபத்தில் ராமதாஸ், அன்புமணி இருவரும் திறந்து வைத்தனர். 

அந்த நிகழ்வில் பேசிய ராமதாஸ் “குரு நம்மை விட்டுச் சென்றது மிகப்பெரிய இழப்பு. குருவை கொல்ல வேண்டும் என்று முயற்சி செய்தவர்கள் அன்று ஆண்டு கொண்டிருந்த தி.மு.க.வினர்தான்.” என்று குருவின் மரணத்தில் தங்களுக்கு எந்த லிங்கும் இல்லை என்று சொன்னார். பிறகு “நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டது கிடையாது. அப்படி ஆசைப்பட்டிருந்தால் என்றோ கவர்னர் ஆகியிருப்பேன். வரும் காலங்களில் நாம் யார் என்பதை காட்டுவோம்.” என்று முறுக்கலாக பேசினார். 

இதே நிகழ்வில் பேசிய அன்புமணி ராமதாஸ் “தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமுதாயம் வன்னிய சமுதாயம். காலம் காலமாக நம்முடைய எதிரிகள் நம்மை பயன்படுத்தி, திசைதிருப்பி பிரித்து சூழ்ச்சி செய்து நம்மை முன்னேற விடாமல், வெறும் வாக்களிக்கும் இயந்திரமாக பார்க்கிறார்கள். அப்படி நம்மை சீரழிப்பதில் முதன்மையான கட்சி தி.மு.க. நம்ம சமுதாயத்தில் மட்டும்தான் அஞ்சாயிரம் கொடுத்தால் போதும் ஐந்து மணி நேரம் மைக்கைப் பிடித்து பேசுகிறான். 

அரசியல் சூழ்ச்சிகளால் பிளவுபடுட், காசு கொடுத்தால் நமக்கு எதிராகவே நம் சமுதாயத்துக்காரன் பதிவு போடுகிறான். அய்யாவை (ராமதாஸ்) எதிர்த்து இனி யார்  பதிவு போட்டாலும், அவர்கள் நம் சமூக துரோகிகள்.” என்று பொங்கிவிட்டார். இதே நிகழ்வில் “நம் கட்சிக்கு நம் சமுதாயம் முழுமையாக வாக்களித்தாலே நூற்று இருபது தொகுதிகளில் வென்றுவிடுவோம். இதை செய்யாவிட்டால் குருவின் ஆவி உங்களையெல்லாம் சும்மா விடாது.” என்று சொந்த மக்களுக்கே சாபம் விடுத்துள்ளனர். ப்பார்றா!