திமுக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் நீக்கப்படலாம் அல்லது அவரை விலகி விடலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தனது மகன் கதிர் ஆனந்திற்கு வேலூர் தொகுதியில் சீட் வாங்கியது முதலே துரைமுருகனுக்கு ஏழரை ஆரம்பித்துவிட்டது. துரைமுருகன் மகனுக்கு சீட் கொடுக்க வேலூர் திமுக முக்கிய பிரமுகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் மீறி ஸ்டாலின் உடனான தனது நெருக்கத்தைப் பயன்படுத்தி மகனுக்கு சீட் வாங்கி விட்டு வேலூர் சென்றார் துரைமுருகன். 

அதிர்ச்சியில் இருந்தவர்களை எல்லாம் நேரில் அழைத்துப் பேசி பிரச்சனையை சமாளித்து பிரச்சாரத்திற்கு சென்ற சமயத்தில் தான் தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித் துறை மூலம் துரைமுருகனுக்கான பிரச்சனை தீவிரமானது. காட்பாடியில் கைப்பற்றப்பட்டது என்னவோ துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தொடர்புடைய படமாக இருந்தாலும் அவரது தந்தை திமுக பொருளாளர் ஆக இருப்பதால் இந்த செய்தி நாடு முழுவதும் முக்கிய செய்தியானது. 

பணம் பறிமுதல் விவகாரத்தில் வேலூர் தேர்தலானது திமுகவிற்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. தேர்தல் முடிந்த பிறகு சென்னைக்கு இரண்டு மூன்று முறை மட்டுமே துரைமுருகன் வந்திருந்தார். ஸ்டாலின் உடனான சந்திப்பின் போது இருவருக்கும் இடையே பெரிய அளவில் சுவாரசியமான பேச்சுக்கள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் இடைத்தேர்தலின் போது துரைமுருகன் விவகாரத்தை இழுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்வது ஸ்டாலினுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கெல்லாம் காரணம் துரைமுருகன் தான் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஸ்டாலின் காட்டமாக கூறியதாகவும் சொல்கிறார்கள். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக துரைமுருகன் தனிப்பட்ட முறையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே குற்றச்சாட்டை நிரூபிக்க வில்லை என்றால் தான் அரசியலில் இருந்து ஒதுங்கி விட தயார் என்று துரைமுருகன் கூறியிருக்கிறார். 

கிட்டத்தட்ட திமுக பொருளாளர் பதவியில் இருந்து விலகும் மனநிலைக்கு துரைமுருகன் வந்து விட்டதையே இது காட்டுவதாக திமுகவின் அனுதாபிகளும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 13 கோடி ரூபாய் பண விவகாரத்தில் சிக்கிய ஒருவரை மிகப்பெரிய கட்சியின் பொருளாளர் பதவியில் நீடிக்க செய்வது என்பது தர்ம சங்கடமான சூழல் என்று ஸ்டாலின் காதிலும் சிலர் வருகின்றனர். இதனால் துரைமுருகன் பதவி ஆட்டம் கண்டுள்ளது.