அமைச்சருக்கு உரிய எந்தத் தகுதியும் இல்லாதவரிடமிருந்து இதைவிட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதற்கு ஓர் இலக்கணம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ப்ளாக் காமெடி எனப்படும் கொடூர தமாஷ் பேர்வழிகளாக மாறியிருக்கிறார்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள். கொரோனா நோய்த் தொற்று பரவுவதற்கு தி.மு.க.,தான் காரணம் என்று பச்சைப் பொய்யை தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து விட்டுள்ள அதிகாரப்பூர்வமற்ற முதலமைச்சரின் செய்தித் தொடர்பாளர் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் இப்படிப் பேசுவதற்குக் காரணம், தனிமைப்படுத்தலின் விளைவோ என்னவோ யாமறியேன்! ஆட்சியின் நாட்கள் குறையக் குறைய ஜெயக்குமாரின் திருவாய், நாலாந்தரக் கருத்துக்களின் கூவமாக மாறி வருவது அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சருக்கு உரிய எந்தத் தகுதியும் இல்லாதவரிடமிருந்து இதைவிட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதற்கு ஓர் இலக்கணம் என்றால், அது அமைச்சரின் இன்றையப் பேட்டிதான். அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு, ஊடகங்களில் வெளியானதால் அதற்கு எதிர்க்கட்சியான திமுக பொறுப்புடன் விளக்கமளிக்க வேண்டிய கடமை உள்ளது.

எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதான எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் எழுப்பிய எந்தக் கேள்விகளுக்கும் முதலமைச்சரிடமும் பதில் இல்லை; அமைச்சரிடமும் பதில் இல்லை. ஆனாலும், நோய்த் தொற்றைக் கண்டுபிடிப்பதற்கு முக்கியமாகத் தேவைப்படும் 'ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்' கையிருப்பு இல்லை என்பதை தனது கொடூர நகைச்சுவைப் பேட்டிக்கு நடுவிலும், மீண்டும் உறுதி செய்துள்ள அமைச்சருக்கு நன்றி! நோயைக் கண்டுபிடிக்கவே உபகரணம் இல்லை. ஆனால் போர்க்கால நடவடிக்கையில் அரசு செயல்படுகிறது என்பது நல்ல வேடிக்கை மட்டுமல்ல; தமிழக மக்களின் உயிருடன் அ.தி.மு.க. அரசு எப்படி விபரீத விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை அது காட்டுகிறது.

முகக்கவசம், வென்டிலேட்டர், என்-95 மாஸ்க், பி.பி.இ. உபகரணங்கள் எல்லாம் கையிருப்பு இருக்கிறது என்றால், நேற்று பிரதமருடனான காணொலிக் காட்சியில் கூட, இவை எல்லாம் வாங்குவதற்கு நிதி கேட்டது ஏன்? உபகரணங்கள் இல்லை என்பதுதான் உண்மை. அதைத் திசைதிருப்ப அமைச்சர் இவ்வாறு உளறிக் கொட்டுகிறார். அதை தமிழக மக்கள் நம்பத் தயாராக இல்லை. இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாத நுனிப்புல் மேயும் திரு. ஜெயக்குமார், கொரோனா தொற்றுக்கு தி.மு.க. காரணம் என்று கூறுவது அபாண்டமானது மட்டுமல்ல;அநாகரிகமானது! அபத்தமானது!

“துண்டு” போட்டு பதவியைப் பிடிப்பதில் “நிபுணரான" ஜெயக்குமார் “கூவத்தூருக்கு”ப் பிறகு இப்போது முதலமைச்சரிடம் “துண்டு” போட்டு அமர்ந்துள்ளார். ஆகவே, பேட்டி என்ற பெயரில் தினமும் 'மைக்' முன்பு நின்று உளறிக் கொட்டி வருகிறார். நாடு முழுவதும் கொரோனா நோய் பரவிக் கொண்டிருந்த நேரத்தில் - குறிப்பாக கேரளாவில் அதிகரித்து வந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு விழாக்களை நடத்தி - வாடகைக்கு அ.தி.மு.க.,வினரைக் கூட்டி வந்து வைத்துக் கூட்டம் போட்டது முதலமைச்சர். மார்ச் 12-ஆம் தேதி சட்டமன்றத்தில் கொரோனா பற்றிப் பேசி விட்டு - 14-ஆம் தேதி திண்டுக்கல்லில் அரசு விழா நடத்தி அ.தி.மு.க.,வினரை வைத்துக் கூட்டம் போட்டது முதலமைச்சர். ஏன், நாடு முழுவதும் பிரதமர் 19-ஆம் தேதி அறிவித்து - 22-ஆம் தேதி சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட பிறகும் 24-ஆம் தேதிவரை இலட்சக்கணக்கான மாணவர்களை பிளஸ் டூ தேர்வு எழுத வைத்தது முதலமைச்சர்.

அமைச்சரின்  பேட்டியின்படி தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுக்கு முழுமையான காரணம் முதலமைச்சரும், அ.தி.மு.க.,வும் என்று குற்றம்  நான் அப்படியெல்லாம் அமைச்சர் போல் அரைவேக்காட்டுத்தனமாகக் கேள்வி கேட்க விரும்பவில்லை! கொரோனா பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே அதனை அறிவியல் பூர்வமாக அணுகி, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை மக்களிடம் வலியுறுத்தி வருபவர் எங்கள் தலைவர். ஆனால் அ.தி.மு.க. அரசு, அப்போதிருந்து இப்போதுவரை கொரோனா தடுப்பில் முழுமையான அக்கறை காட்டவில்லை. அ.தி.மு.க. அரசின் தோல்வியைத் திசைதிருப்ப அமைச்சர் ஜெயக்குமார் தி.மு.க. மீது பழி போடுவது அழகல்ல; அமைச்சரின் எண்ணத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்ற அசிங்கம் இது என்று கூறிட விழைகிறேன்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பித்தால்தான் முறையாக இருக்கும் என்று தத்துவம் பேசும் திரு.ஜெயக்குமார், அதே பேட்டியில் அதை மறுக்கும் விதமாக ஏற்கனவே தமிழக முதலமைச்சர் இந்தியாவிற்கே முன்னோடியாக மார்ச் 24 முதல் 31 வரை ஊரடங்கு பிறப்பித்தார் என்று கூறியிருக்கிறார். இப்போது நீட்டிப்பதற்கு, இந்தியா முழுவதும் ஊரடங்கு எனக் காரணம் காட்டுவதன் மூலம், முதலமைச்சர் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க தயக்கம் காட்டுகிறார் என்ற எங்கள் தலைவரின் குற்றச்சாட்டை அமைச்சரே வழி மொழிந்திருக்கிறார். அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன்.

இன்றைக்கு தமிழக மக்களே, 'எதிர்கட்சித் தலைவர் செயல்படுகிறார். ஆளுங்கட்சித் தலைவரும் - அமைச்சர்களும் எங்கே?' என்று தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, திமுக மக்கள் பணியை தாங்கிக் கொள்ள இயலாத அமைச்சர் ஜெயக்குமார் - எங்கள் தலைவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் தவிப்பதே - அ.தி.மு.க. அரசின் தோல்வியைக் காட்டுகிறது. நோய்த் தொற்றுக்குக் காரணம் தி.மு.க. என்று கூறும் அவரது மனநிலையில் ஏதோ பிரச்சினை இருக்கிறதே தவிர - தமிழக மக்களுக்கான பணி என்ற எங்கள் கழகத்தின் மார்க்கத்தில் எவ்விதப் பிழையும் இல்லை என்று தெரிவித்துக் கொண்டு - எங்கள் கட்சித் தலைவர் கூறியது போல் அனைத்துக் கட்சியினரையும் அரவணைத்து தமிழக மக்களை இந்தக் கொடூர நோயிலிருந்து காப்பாற்றிட அ.தி.மு.க. அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.