விக்கிரவாண்டி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது என்றால், திமுக தலைவர் ஸ்டாலினிடம் கருணாநிதி கற்றுகொடுத்த  ராஜதந்திரம் இருக்கிறது. எனவே இத்தேர்தலில்  திமுக அதிக வாக்கு வித்தியாச்சத்தில் வெற்றிபெரும் என திமுக பொருளாளர் துரைமுருகன் அதிரடியாக கூறியுள்ளார்.

 

விக்ரவாண்டி நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,  விக்ரவாண்டி அந்நியூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பொருளாளர்  துரைமுருகன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் புகழேந்தி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்றார். திமுக சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி  என்று கூறிய துரைமுருகன்,  சிலர் இங்கு சாதியை வைத்து அரசியல் செய்ய நினைக்கின்றனர் என்றார்.  

வன்னியர்களுக்கு திமுகவில் முக்கியத்துவம் இல்லை என்று பாமக  ராமதாஸ் குறை கூறுகிறார், தற்போது, நான் வகித்து வரும் பொருளாளர் பதிவி கருணாநிதி, எம்ஜிஆர் போன்றோர் வகித்த பதவி, இந்த பதிவி எனக்கு கொடுக்கப்பட்டுள்ளதை எண்ணி ராமதாஸ் போன்றோர் மகிழ்ச்சியடைய தேவையில்லையா.? என்றார். ஆனால் இந்த பதவியை ராமதாஸ் டம்மி என்கிறார், என்றார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டிய அவர்,  பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்று அதிமுக திட்டம் போடுகிறது, ஆனால் அதையெல்லாம் முறியடிக்க  திமுக தலைவர் ஸ்டாலினிடம் தலைவர் கருணாநிதி  கற்றுக்கொடுத்த ராஜதந்திரம் இருக்கிறது என்றார்.

 

நடைபெறும் இந்த தேர்தலில்,  திமுக வேட்பாளர்  புகழேந்தி 25 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்  வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் கூறினார். சாதி உணர்வைத் தூண்டி அதிமுகவை வெற்றி பெறவைத்துவிடலாம் என ராமதாஸ் தப்பு கணக்கு  போடுவதாகவும்  இந்த முறை மக்கள் அதை முறியடிப்பார்கள் என்றார்.  மக்கள் இந்தத் தேர்தலை சாதிக் கண்ணோட்டத்துடன் பார்க்க தேவையில்லை, வெறும் 11 மாதங்கள் மட்டுமே இந்த ஆட்சி, அதற்குப் பிறகு திமுகவின் ஆட்சிதான் என்று கூறிய அவர், திமுக ஆட்சி வந்தவுடன் நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்தார்.