உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து ஜெயிக்க திமுக தான் காரணம் என அமைச்சர் ஜெயகுமார் கிண்டலாக கூறியுள்ளார். 

சென்னை, அண்ணா சாலையில் உள்ள மதரஸா- இ- இஸ்லாம் மேல்நிலை பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின்  விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா மற்றும் அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக் கணினிகளை வழங்கினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ’’மாநில மொழிகளில் அஞ்சல் துறை தேர்வு  நடத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானதற்கு தாங்கள்தான் காரணம் என்று சொல்லும் தி.மு.க., இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றதற்கும் தாங்கள் தான் காரணம் எனக் கூறுவார்கள். உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தீர்மானிக்கும், ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி என்பது மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது.

திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்ட அனைத்து உரிமைகளும் அதிமுக ஆட்சியில் மீட்கப்பட்டன. நீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டைவேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது’’ என கிண்டலாகத் தெரிவித்தார்.