அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கொடுக்காமல் அதிமுக ஏமாற்றி விடப்போகிறது என ராமதாஸை கிண்டலடித்து உள்ளது திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி. 

சிலந்தி பக்கத்தில் ராமதாஸை கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதில், ‘’குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையே’’ என பெருமிதம் பேசுவதில் நமது மருத்துவர் அய்யாவுக்கு நிகர் அவரேதான் இருக்க முடியும். தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தைதான் ஏற்படுத்தியதே தவிர எனக்குள் எந்தவித கவலையோ, கலக்கத்தையோ தரவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உண்மைதான் அய்யாவுக்கு எப்படி கவலை வரும். பல தலைமுறைகளை வளப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு வரவேண்டியதெல்லாம் வந்துவிட்டது. மகன் தோல்வியை முன்னரே ஊகித்து ஒரு ’ராஜ்யசபா’ எம்.பி.சீட்டையும் முன்னதாகவே ரிசர்வ் செய்து வைத்தாகி விட்டது. அய்யாவுக்கு கவலையோ கலக்கமோ ஏன் ஏற்படப்போகிறது? அய்யாவை நம்பி களத்தில் இறங்கி சொத்து பத்துகளை விற்று தேர்தலை சந்தித்து இன்று நடுத்தெருவுக்கு வந்திருக்கும் அவரது பாட்டாளி சொந்தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வலி, அய்யாவுக்கு எப்படி ஏற்பட முடியும்?
 
மோடி அவர்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வுக்கு உங்கள் திருமகன் உங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி மற்றும் உங்கள் கூட்டணியில் அங்கம் வகித்த கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம் புடைசூழ ஒரே விமானத்தில் டெல்லிக்கு பயணிஆரே, அதே போன்று அனுப்பி தமிழக மக்கள் நலனுக்காக பங்காற்றக் கூடாதா? அய்யாவின் ஆசை மகன் அன்புமணியும் திமுகவின் தயவால் பதவி பெற்று மத்தியில் அமைச்சராக இருந்தார் என்பதை மறந்துவிட்டு பிதற்றுவது என்ன நியாயம். 

அடுத்து கூட்டணி பங்கீட்டு பேச்சு உடன்படிக்கை படி ஒரு, ராஜ்யசபா’ சீட்டு பாக்கி இருக்கிறது. அதை அன்புமணிக்கு தயார் செய்யுங்கள். கூட்டணி வைத்து தோல்வி தானே கண்டோம் என அந்த சீட்டை தராது அதிமுக கைவிரித்து விடப்போகிறார்கள்’’ என அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.