அரசு உயரதிகாரிகளுக்கு தொடர்ந்து திமுகவினர் மிரட்டல் விடுத்து வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? எனக் கேள்வி எழுந்துள்ளது. 

திமுகவின் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ், மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு லட்சம் மனுக்களை தலைமை செயலாளர் சண்முகத்திடம் திமுக எம்பிக்கள் வழங்கினர். திமுக எம்பிக்களான தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் இந்த மனுக்களை தலைமை செயலாளரை சந்தித்து வழங்கினர். 

இந்த மனுக்களை கொடுத்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், இந்த இக்கட்டான சூழலில் திமுக ஆற்றிவரும் நிவாரண பணிகளை பார்த்து தலைமை செயலாளருக்கு பொறாமை. நாங்கள் மனு கொடுக்கும்போது, எம்பி-க்களான எங்களை கொஞ்சம் கூட மதிக்காமல், டிவியில் சத்தத்தை அலறவைத்துக்கொண்டு நாங்கள் பேசியதை கவனித்தார். அதுமட்டுமல்லாமல், உங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை என்று கொச்சைப்படுத்தினார். அவரது இந்த கூற்றை கேட்டு நாங்கள் அதிர்ந்தே போனோம் என்று தயாநிதி மாறன் பகிரங்மாக குற்றம்சாட்டினார். இதனை மனதில் வைத்து தி.மு.க ஆட்சியில் வருவதற்குள் ரிடையர்டு ஆனாலும் பூழல் ஜெயில் 2 ம் பிளாக்கில் அடைக்கபட போகும் நபர் வாழ்த்துக்கள் சார்'’ என தலைமை செயலாளர் சண்முகத்தின் புகைப்படத்தை போட்டு பகிரங்கமாக மிரட்டி வருகின்றனர். 

முன்னதாக,  ’’கொரொனா தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கரூர் சட்டமன்ற உறுப்பினர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளும்போது, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரான என்னையும், குளித்தலை சட்டமன்ற உறுப்பினரான ராமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோரை அழைக்கவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை கேட்டால், மாவட்ட ஆட்சி தலைவர் என்ற பக்குவம் இல்லாமல் அவர் இருக்கின்றார்.

 இந்த நிலை தொடர்ந்தால் மாவட்ட ஆட்சியர் எங்கும் வெளியில் போக முடியாது. படித்த முட்டாளாக இருக்கிறார். மாவட்ட ஆட்சித் தலைவர் என்கிற பக்குவமே இல்லாமல் இருக்கிறார். இதுதான் கடைசியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் இந்த நிலையை தொடர்ந்தால் வெளியில் எங்கும் போக முடியாது. அவர் காவல்துறையை வைத்து அடக்குமுறையை கையாளட்டும். அரசு இயந்திரத்தை பயன்படுத்தட்டும். 2 லட்சம் மக்கள் பிரதிநியாக இங்கே வந்திருக்கிறோம். ஆகையால் மாவட்ட ஆட்சியருக்கு இதனை கட்சி எச்சரிக்கையாக சொல்கிறேன்’’ என திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட ஆட்சியருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தார். 

திமுகவினர் இப்படி தொடர்ந்து  அரசு உயரதிகாரிகளை பகிரங்கமாக மிரட்டி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.