‘இரும்பு மாதிரி உடம்பை மெயின்டெயின்  பண்ணுவது மட்டுமில்லை, கட்சி தாவுவதிலும் செம்ம கில்லாடிதான்!’ என்று  கடும் விமர்சனத்துக்கு ஆளானவர் நடிகர் சரத்குமார். 

தி.மு.க. ஆதரவு குடும்பத்தில்  இருந்து வந்து, அ.தி.மு.க. ஆதரவு ஹீரோவானார். பின் தி.மு.க.வில் இணைந்து எம்.பி.யானார். அதன் பின் அ.தி.மு.க.வை ஆதரித்தார். தனிக்கட்சி துவங்கி ஜெயலலிதாவை போற்றினார்,  அவர் தயவில் எம்.எல்.ஏ.வானார். மீண்டும் சீட் கிடைக்கலையேன்னு தி.மு.க. பக்கம் சாய்ந்தார்,  சீட் கிடைத்ததும் அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்தார். பின் ஜெயலலிதா மரணத்துக்குப் பின் தன்னை இ.பி.எஸ். தன்னை கண்டுகொள்ளாத நிலையில் அக்கட்சியை விமர்சித்தார். பின் அழைத்து மரியாதை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அ.தி.மு.க.வை போற்றுகிறார். 

இப்படியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது சரத்குமாரின் ப்ரொஃபைல். அப்பேர்ப்பட்ட சரத் சமீபத்தில் “தி.மு.க. தன் சுயநலத்துக்காகத்தான் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியது. ஆனால் தி.மு.க. நிர்வாகிகளின் குடும்பத்தினர் இந்தி கற்றுக் கொண்டனர். பல மொழிகளையும் மாணவர்கள் கற்க வேண்டும்.” என்று தி.மு.க.வை கடுமையாக உரசியிருந்தார். இதில் செம்ம டென்ஷனான தி.மு.க.வின் இணையதள விங், சரத்குமாரை வெச்சு செய்து கொண்டிருக்கிறது தங்களின் சமூக வலைதள பக்கங்களில். 

அதில் “சித்தப்பு சரத்குமாருக்கு வணக்கம் (சித்தி ராதிகாவின் கணவர் என்பதால்...) சினிமாக்காரர் நீங்க நிஜ வாழ்க்கையிலும் நிறைய டயலாக் பேசியிருப்பீங்க. உமக்கு ஒரு டயலாக்கை ஞாபகப்படுத்த விரும்புறோம். ’நான் இறந்த பிறகு என் உடல் மீது தி.மு.க.வின் இரு வண்ண கொடியை போர்த்த வேண்டும்!’ அப்படின்னு முத்தமிழறிஞர் முன்னாடி உணர்ச்சிவசப்பட்டு பேசி மைக்கை கடிச்சு தின்னது ஞாபகமிருக்குதா?
அப்பவெல்லாம், தி.மு.க. நிர்வாகிங்க குடும்பம் இந்தி படிச்சதும், சுயநலனுக்காக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பண்ணியதும் நியாபகத்துக்கு வரவேயில்லையா? ஏன், பதவி வெறி கண்ணை மறைச்சுடுச்சாக்கும்? இப்ப சொல்லும்யா சுயநலவாதி நீரா? இல்ல  எங்க இயக்கமா?ன்னு” என்று போட்டுப் பொளந்துள்ளனர். சரத்குமாரை இந்த விமர்சனங்கள் வெகுவாய் சங்கடப்படுத்தியுள்ளதாம். ஓஹோ!