இளைஞர் அணிச் செயலாளர் பதவியை விட்டுக் கொடுத்த திருப்பூர் வெள்ளக் கோவில் சாமிநாதன் மகன் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை.

முன்னாள் அமைச்சர் வெள்ளக் கோவில் சாமிநாதன் மகன் திருமணம் நேற்று திருப்பூரில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் கலந்து கொண்டார். மேலும் மேடையில் ஏறி ஸ்டாலின் – துர்கா தம்பதி மணமக்களை வாழ்த்தினர். அத்துடன் அங்கிருந்து சாப்பிட்டுவிட்டே புறப்பட்டனர். 

மேடையில் பேசிய ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஒன்றிய அளவிலான பொறுப்பில் இருந்து மாநில இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு வரை உயர்ந்தது எப்படி என்று விளக்கி கூறினார். மேலும் தான் பல ஆண்டுகளாக வகித்த இளைஞர் அணிச் செயலாளர் பதவியை வெள்ளக் கோவில் சாமிநாதனிடம் கொடுத்தது ஏன் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 

இப்படி எல்லாம் சுபமாக நிகழ்ந்த நிலையில் திமுகவினர் பலரும் கேட்ட கேள்வி எங்கே அடுத்த தலைவர் உதயநிதி என்பதைத்தான். ஏனென்றால் உதயநிதி தற்போது இருக்கும் இளைஞர் அணிச் செயலாளர் பதவியில் முதலில் இருந்தவர் வெள்ளக் கோவில் சாமிநாதன். அவரை அந்த பதவியில் இருந்து விடுவித்துவிட்டு தான் உதயநிதியை அப்பொறுப்பிற்கு நியமித்தார் ஸ்டாலின். 

அந்த வகையில் உதயநிதி தற்போது இருக்கும் பதவி வெள்ளக் கோவில் சாமிநாதன் விட்டுக் கொடுத்தது தான். அப்படி இருக்கையில் வெள்ளக் கோவில் சாமிநாதன் மகன் திருமணத்தில் உதயநிதி பங்கேற்காதது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. இது குறித்து விசாரித்த போது, நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அனைத்து மாவட்டங்களிலும் உதயநிதியை இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

அப்போது உதயநிதி தரப்பில் இருந்து வெள்ளக் கோவில் சாமிநாதனை அணுகியதாகவும், உதயநிதிக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் கூறுமாறு சொல்லப்பட்டதாகவும் சொல்கிறார்கள். ஆனால் வெள்ளக் கோவில் அதற்கு மறுத்ததோடு, விஷயத்தை ஸ்டாலினிடம் கொண்டு சென்றதாகவும் பேசிக் கொள்கிறார்கள். இதனால் ஏற்பட்ட மனக்கசப்பால் தான் வெள்ளக் கோவில் சாமிநாதன் இல்ல திருமணத்தில் உதயநிதி கலந்து கொள்ளவில்லையாம்.