DMK Suffered on Money distributed at RK Nagar

கொடுப்பது விலக்கும் கொடியவர் சுற்றமும் உண்பதும், உடுப்பதும் இன்றி கெடும் என்ற ஆன்றோர் வாக்கு, இடை தேர்தலுக்கு கூட பொருந்தும் என்பதை கடைசியில் உணர்ந்துள்ளது திமுக.

ஆர்.கே.நகரில், தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் அணிகளின் பாரபட்சமற்ற பண மழையால், கொளுத்தும் கோடை வெயிலையும் தாண்டி வாக்காளர்கள் குளிர்ந்து போயுள்ளனர்.

ஆனால், வாக்காளர்களுக்கு பணம் எதுவும் வழங்காமல், தினகரன் தரப்பு வழங்கும் பணம் மற்றும் பரிசு பொருட்களை தடுத்து நிறுத்தும் வேலைகளில் மட்டுமே திமுக கவனம் செலுத்தி வந்தது.

நள்ளிரவு, அதிகாலை என பல்வேறு ரூபங்களில் வாக்காளர்களை மனம் குளிர கவனிக்க செல்லும் தினகரன் தரப்பினரை ஆங்காங்கே திமுகவினர் தடுத்து நிறுத்துவதால், பல இடங்களில் மோதலும் வெடித்தது. 

பணம் கொடுக்க வருபவர்களை தடுத்து நிறுத்துவதால், தங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போய்விடும் என்று அஞ்சும் மக்கள், திமுகவின் மீது கடும் வெறுப்பில் இருக்கின்றனர்.

இதனால் தமக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளும் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மற்றவர்கள் பணம் கொடுப்பதை தடுக்காமல் இருப்பதுடன், தாமும் கரன்சியை அவிழ்க்கவில்லை என்றால் கவிழ்ந்து விடுவோம் என்று கடைசி நேரத்தில் திமுக உணர்ந்து விட்டது. 

எனவே, தமக்கென்று விழும் வாக்குகளை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக் கூடாது என்று திமுகவும் கரன்சி விநியோகத்திற்கு தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

எனினும், தினகரன் மற்றும் பன்னீர் அணிகள் அள்ளி வீசும் அளவுக்கு திமுக கரன்சியை அவிழ்க்குமா? என்பது சந்தேகம்தான் என்கின்றனர் அக்கட்சியை சேர்ந்தவர்கள்.

முன்பெல்லாம், கட்சிக்கு பலவீனமாக இருக்கும் ஒரு சில சில பகுதிகளில் வாக்குகளை பெறுவதற்காக கொஞ்சம் பணம் கொடுப்பது வழக்கம்.

ஆனால், சொந்த கட்சி வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் கிடைப்பதற்கு கூட, தற்போது பணம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகி விட்டது என்று கவலை தெரிவிக்கின்றனர் திமுக மூத்த தொண்டர்கள்.