தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை எதிர்கொள்ள ஒவ்வொரு கட்சியும் வியூகங்களை வகுத்து வருகின்றன. திமுக சார்பில் தேர்தல் பணிகள் 5 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. கொரோனாவின் தாக்கம் இருந்தாலும், தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் தேர்தலை எதிர்க்கொள்ள வசதியாக ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி அமைக்க மாவட்டச் செயலாளர்களுக்கு மற்றும் பொறுப்பாளார்களுக்கு திமுக மேலிடம் அறிவுறுத்தி, அதை கட்சி பத்திரிகை முரசொலியில் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தப் பணியை மூன்று வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் கட்சித் தலைமை நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பொறுப்பாளர், இரு துணை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

 
பொறுப்பாளர்கள் நியமனத்துக்குப் பிறகு ஒவ்வொரு குழுக்களிலும் 10 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கி இருப்பதால் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.