பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு பூசாரி வைத்து விட்ட விபூதியை அழிக்காமல் வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடவுள் மறுப்பு எனும் அடிப்படை கொள்கையுடன் இயங்கி வரும் இயக்கம் தி.மு.க. அந்த கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதி கடைசி வரை கடவுள் மறுப்பில் உறுதியாக இருந்தார். இதே போல் மு.க.ஸ்டாலினும் கூட கடவுள் மறுப்பு குறித்து வெளிப்படையாக பேசமாட்டார் என்றாலும் விபூதி வைப்பது, கோவிலுக்கு செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது இல்லை. 

திராவிட பாரம்பரியத்தில் தான் தொடர்வதாக காட்டிக் கொள்ள ஸ்டாலின் இந்து மதம் தொடர்புடைய சடங்குகளிலும் பங்கேற்பது இல்லை. ஆனால் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தற்போது இரட்டை நிலை எடுத்திருப்பதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஏனென்றால்கடந்த ஜூன் மாதம் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்திற்கு சென்று இருந்தார். ஸ்ரீரங்கம் கோவிலை கடந்து சென்ற போது அங்குள்ள அர்ச்சகர்கள் ஸ்டாலினை சந்திக்க காத்திருந்தனர். 

இதனை அறிந்து காரில் இருந்து இறங்கிய ஸ்டாலின் அர்ச்சகர்களிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது அர்ச்சகர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து ஸ்டாலினிடம் எடுத்துரைத்தனர். இதனை கேட்டு ஆவண செய்வதாக கூறிவிட்டு புறப்பட தயாரான போது அர்ச்சகர் ஒருவர் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தியதுடன் விபூதியும் வைத்துவிட்டார். 

ஆனால் அடுத்த சில நொடிகளில் அந்த விபூதியை அழித்து தான் திராவிட பாரம்பரியத்தை சேர்ந்தவன் என்பதை நிரூபித்துவிட்டு புறப்பட்டார் ஸ்டாலின். ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர் வைத்த விபூதியை ஸ்டாலின் அழித்தது அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். ஆனால் அதன் பிறகு அந்த பிரச்சனை அப்படியே முடிந்து போனது.

 

ஆனால் மீண்டும் ஒரு விபூதி சர்ச்சையில் ஸ்டாலின் தற்போது சிக்கியுள்ளார். இந்த முறை பிரச்சனைக்கு காரணம் அவர் பசும்பொன்னுக்கு சென்று வந்தது. பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்ற ஸ்டாலினுக்கு அங்குள்ள பூசாரி விபூதி மற்றும் குங்குமம் வைத்துவிட்டார். ஸ்ரீரங்கத்தில் செய்தது போலவே விபூதியை ஸ்டாலின் அழிப்பார் என்று அவருடன் இருந்தவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் ஸ்டாலினோ அந்த விபூதி மற்றும் குங்குமத்தை பவ்வியமாக பெற்றுக் கொண்டு வெளியே வந்தார். தற்போது ஸ்ரீரங்கத்தில் பிராமணர் ஒருவர் வைத்த விபூதியை அழித்த ஸ்டாலின் தேவர் ஒருவர் வைத்த விபூதியை அழிக்காதது ஏன்? வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்கிற பயத்திலா என்று படத்துடன் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.