ஐபேக் கம்பெனி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்றத்தொகுதி வாரியாக யாருக்கு செல்வாக்கு இருக்கிறது. இந்த தொகுதியில் திமுக கரையேறுமா? என்றெல்லாம் அலசி ஆராய்ந்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், உளவுத்துறை பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுகவே கைப்பற்றும் திமுகவிற்கு வாய்ப்பு குறைவு என்று அறிக்கை தாக்கல் செய்திருக்கிறதாம். திமுக வெற்றி பெற்ற பரமக்குடி தொகுதி திமுக கையைவிட்டு போவதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்வதற்காக தீபாவளிக்கு முந்தையநாள் இராமநாதபுரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் ரகசியமாக மாவட்டச்செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலாளர் திவாகரன், முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திசைவீரன்,பரமக்குடி ஒ.செ ஜெயக்குமார், சந்திரசேகர்,போகலூர் ஒன்றியச் செயலாளர் கதிரவன், நயினார் கோவில் ஒன்றியச்செயலாளர் சக்தி, பரமக்குடி நகர் செயலாளர் சேது.கருணாநிதி ஆகியோருடன் ரகசிய ஆலோசனைக்கூட்டம் நடத்தியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு.


இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டமன்றத்தொகுதி கடந்த இரண்டு முறை அதிமுக கைப்பற்றியுள்ளது.இதற்கு முன்பு திமுக வசம் இருந்தது. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சண்.சம்பத்குமார் தோல்வியடைந்தார். அதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்திருக்கிறது ஐபேக் டீம். அந்த ஆய்வு அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு ஆய்வுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு.

அந்த ஆய்வு அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை பரமக்குடி சட்டமன்றத்திற்குட்பட்ட  திமுக முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம்.
"பரமக்குடி தொகுதி தோல்விக்கு முக்கிய காரணமாக நயினார்கோவில் போகலூர் யூனியன் தான். காரணம் முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன் சொந்த ஊர் நயினார்கோவில் யூனியனுக்குள் வருகிறது. அவர்கள் மாவட்டச்செயலாளராக இருந்த வரை நயினார் கோவில் யூனியன் சேர்மன் திமுகவினர் வசம் இருந்தது. சுப.திவாகரன் மாவட்டச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும்.நயினார்கோவில் யூனியன் அதிமுகவிற்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது 

இதே போன்று போகலூர் யூனியன் ஒன்றியச் செயலாளராக இருந்த கதிரவன். யூனியன் சேர்மன் பதவியை அடைய முடியவில்லை என்கிற வயிற்றெரிச்சலில் வாக்குச்சீட்டில் மையை ஊற்றி கலவரத்தில் ஈடுபட்டார்.அதன்பிறகு திமுகவைச் சேர்ந்த சத்யாகுணசேகரன் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எப்போதுமே எம்எல்ஏ தேர்தல் வாக்குகள் எண்ணும் போது போகலூர் யூனியன் தான் திமுகவிற்கு அதிகமான வாக்குகளை அள்ளிக்கொடுக்கும். இந்த யூனியனில் அதிகமான அளவிற்கு தேவேந்திரகுலவேளாளர் வாக்குகள் உண்டு. இவர்களுக்கு இணையாக யாதவர்கள் இருக்கிறார்கள்.தேவேந்திர வேளாளர் வாக்குகள் சிதறிக்கிடக்கிறது. இந்த வாக்குகளையும் யாதவர் வாக்குகளையும் கவர் பண்ணக்கூடிய அளவிற்கு அங்கே கட்சி பொறுப்பில் ஒருவர் இருந்தால் மட்டுமே அந்த வாக்குகளை அள்ள முடியுமாம். தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள்  எப்போதும் திமுகவிற்கு பொக்கிசம் போல் இருக்கும்.எனவே தான் இந்த யூனியன் திமுகவின் கோட்டை என வர்ணிக்கப்படும்.

நடந்து முடிந்த இடைத்தேர்தல் உள்பட இரண்டு தேர்தல்களில் அதிமுக இந்த யூனியனில் முன்னிலையில் இருந்தது. காரணம் கட்சியில் சீனியரான வழக்கறிஞர் பூமிநாதன் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அனுபவம் உள்ளவர்.இன்னொருவர் குணசேகரன். இவர்களை விடுத்து கட்சியில் அனுபவம் இல்லாதவரான கே.கே கதிரவனுக்கு மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம் ஒன்றியச் செயலாளர் பதவியை கொடுத்தது அங்கே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலாடி, பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி போன்ற ஒன்றியங்களில் கோஷ்டி பூசலை சரிசெய்வதற்காக ஒரு ஒன்றியத்திற்கு இரண்டு மாவட்டச்செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போன்று நயினார்கோவில், போகலூர் ஒன்றியத்திற்கு இரண்டு ஒன்றியச் செயலாளர்கள் நியமிக்க வேண்டும் என்று தலைமைக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறது ஐபேக் மற்றும் கட்சி நிர்வாகிகள். இந்த இரண்டு யூனியன்களை சரி செய்யாதவரைக்கும் திமுக தோல்வியை சந்திக்கும் என்று ஏ.வ. வேலுவிடம் அவரவர் தங்களது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். இந்த இரண்டு யூனியன்களில் நடக்கும் கோஷ்டி பூசல்களால் தான் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் தோல்வியடைந்தார்

சுப.தங்கவேலன் குடும்பத்தினர் தான் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பதவிகளை குத்தகைக்கு எடுத்தார் போல் மாவட்டச்செயலாளர் ஒன்றியச்செயலாளர் கூட்டுறவு மாவட்டச் பஞ்சயாத்து தலைவர் பதவியென வைத்திருந்தார்கள்.அப்படி இருந்தவர்களின் மாவட்டச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டதும். அவர்களுடைய ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து திமுக வேட்பாளரை தோற்கடித்திருக்கிறார்கள் என்று ஆய்வு கூட்டம் நடத்திய ஏவ.வேலுக்கு புரியவைத்திருக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். என்கிறார்கள்.
தேர்தலுக்கு முன்பே திமுக தலைவர் ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவார் என்கிறார்கள் விபரமறிந்த திமுக நிர்வாகிகள்.