பணத்தை மட்டும் வைத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என பகல் கனவு கண்டு கொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள் என அதிமுகவை மறைமுகமாக டிடிவி தினகரன் சாடியுள்ளார். 

இது தொடர்பாக, டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்;- நம்முடைய இதயத்தைவிட்டு அகலாமல் ஒவ்வொரு கணமும் நம்மை வழி நடத்தி கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் பிறந்த நாள் எப்போதுமே நமக்கு சிறந்த நாள். எம்ஜிஆர் போட்டுத்தந்த பாதையில், ஜெயலலிதா கற்றுத்தந்த துணிவோடு, ஜெயலலிதாவின் லட்சியங்களை வென்றெடுத்திட உழைக்கிற நாம், ஒவ்வோர் ஆண்டும் அவரின் பிறந்தநாளை உணர்வுப்பூர்வமாக கொண்டாடி வருகிறோம்.

அந்த வகையில், ஏழை, எளிய மக்களுக்காகவே சிந்தித்து திட்டங்களை நிறைவேற்றிய அந்த மாதரசியின் வழியில் இல்லாதோருக்கு நலத்திட்ட உதவிகளை நீங்கள் வழங்கி கொண்டாடவுள்ளதை அறிவேன். இதுவே 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்' என்ற அண்ணாவின் மொழியை தன் வாழ்நாள் முழுக்க கடைபிடித்த ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக அமைந்திடும். எளிய மக்களின் முகங்களின் மலர்கிற புன்னகையின் வழியாக நாம் ஜெயலலிதாவை தரிசித்திட முடியும். என் பேரன்புக்குரிய தொண்டர்கள், இதற்கான ஏற்பாடுகளை ஒவ்வோர் ஊரிலும் சிறப்பாக செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இதோடு, ஜெயலலிதாவின் பிறந்தநாளில், சசிகலாவின் வாழ்த்துகளோடு திமுக எனும் தீய சக்தி கூட்டத்தை தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்க விடக்கூடாது என்ற கடமையும் நம் கைகளில் இருக்கிறது. அதனை நிறைவேற்றுவதே, தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த அரும்பெரும் தலைவரான ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும்.

ஏனென்றால், 10 ஆண்டுகளாக பதவியில் இல்லாமல் காய்ந்து போய் மக்களின் மீது பாய்வதற்கு திமுகவினர் தயாராகி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஊருக்கு ஊர் எதையெல்லாம் அபகரிப்பார்கள், என்னென்ன அட்டூழியங்களை அரங்கேற்றுவார்கள், வணிகர்கள் மற்றும் சாதாரண மக்களின் நிம்மதி எப்படியெல்லாம் குலைந்து போகும் என்பதை எல்லாம் யோசித்துப் பார்த்தால் நமக்கு முன்பு இருக்கும் கடமையின் முக்கியத்துவம் புரிந்துவிடும். தமிழகத்திற்காக, தமிழக மக்களின் நலன்களுக்காக இந்த கடமையைச் சரியாக செய்து முடிக்க ஜெயலலிதாவின் பிறந்தநாளில் உறுதி ஏற்றிடுவோம்.

பணத்தை மட்டும் வைத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என பகல் கனவு கண்டு கொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். இப்படித்தான் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் பணத்தை நம்பி தேர்தலைச் சந்தித்த திமுகவுக்கு மக்கள் என்ன பதில் கொடுத்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்போது தொண்டர்களின் கடும் உழைப்பாலும், மக்களின் ஆதரவாலும் தீயசக்தி கூட்டத்தை ஜெயலலிதா வீழ்த்தி காட்டினார். 2016 ஆண்டிலும் திரும்பவும் எழுந்திருக்க முடியாத அடியை அவர்களுக்கு கொடுத்தார். இப்போது 2021-ல் ஜெயலலிதாவின் திருவுருவத்தை நெஞ்சிலும், பெயரிலும், கொடியிலும் தாங்கியிருக்கும் நம்முடைய இயக்கம் அந்தப் பணியினைச் செய்திடப் போகிறது.

இப்போராட்டத்தில் நமக்கு கிடைக்கப்போகிற வெற்றியின் மூலம், எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காப்பற்றப்பட்ட பேரியக்கத்தை, நாம் மீட்டெடுத்து ஜெயலலிதாவின் புகழுக்கு பெருமை சேர்த்திடுவோம் என்ற உறுதிமொழியையும் இந்த நல்ல நாளில் ஏற்றிடுவோம். சோதனை நெருப்பாறுகளைக் கடந்து, ஜெயலலிதா வளர்த்த சிங்கக்குட்டிகளாக நெஞ்சு நிமிர்த்தி பயணித்து, 2021 தேர்தல் களத்தில் புதிய வெற்றிகளைப் பெற்று அதனை ஜெயலலிதாவின் நினைவுகளுக்கு அர்ப்பணிப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.