தமிழக பாஜக தலைவர் எல். முருகனை அவரது இல்லத்துக்கு சென்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான வி.பி. துரைசாமி நேரில் சந்தித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக தமிழக பாஜக வெளியிட்ட செய்திக்குறிப்பில் திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, தமிழக பாஜக தலைவர் முருகனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவர் மாநிலத் தலைவரானதற்கு வாழ்த்து தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.

ஆனால், உண்மையாக சொல்ல போனால் மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்களின் பதவிக்காலம் சமீபத்தில் முடிந்தபோது தன்னை மாநிலங்களை எம்.பி.யாக்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துரைசாமி வாய்ப்பு கேட்டார். ஆனால், கருணாநிதியால் கண்டிக்கப்பட்ட அந்நியூர் செல்வராஜூக்கு மாநிலங்களவை எம்.பி. வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அவர் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில், பாஜக தலைவர் முருகனை திடீரென சந்தித்து பேசியிருப்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவை திமுக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவரை வி.பி. துரைசாமி மரியாதை நிமித்தமாக சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? முருகன் தமிழக பாஜக தலைவராகி பல வாரங்கள் கடந்த பிறகு தான் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பும் அரசியல் வட்டாரங்கள் அவர் திமுகவுக்கு முழுக்கு போட்டுவிட்டு பாஜகவில் இணைய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.