உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கொல்லைப் புறமாக நுழைந்த இந்தியை தடுத்து விரட்டிய கழகத் தலைவர் தளபதிக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை:


 “தமிழ் ஆராய்ச்சிகென்றே உருவாக்கப்பட்ட ஓர் உயராய்வு நிறுவனத்தில் இந்தி மொழியைக் கற்பிக்கத் துணியும் தமிழ் வளர்ச்சித் துறையின் போக்கினையும், இந்த அறிவிப்பினையும் வன்மையாக கண்டித்து கழகத்தின் சார்பில் அறிக்கை ஒன்றினை வெளியிடுமாறு கட்சி பணித்தது. அதன்படி தமிழ்வளர்ச்சித் துறையின் செயலைக் கண்டித்தும் அண்ணாவால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அடிப்படை கொள்கைகளுக்கும் நோக்கங்களுக்கும் முற்றிலும் எதிரானது எனத் தெரிவித்தும்; இதனை உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தியும் அறிக்கை வெளியிட்டேன்.


அதைத் தொடர்ந்து உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிப்பது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த முடிவு என்றும், இது கடந்த 2014ம் ஆண்டு முதலே நடைமுறையில் இருந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து, 2014ம் ஆண்டு முதல் நடைமுறையில் திட்டத்தை 2019-20ம் ஆண்டுக்கான தமிழ்வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் புதிய அறிவிப்பாக வெளியிட்டு நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் ஏன் கேள்வி எழுப்பினேன். மேலும் திமுக மாணவர் அணி சார்பில் தமிழ்வளர்ச்சித் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் சென்னையில் நடத்தினோம்.
இந்நிலையில் அவசரம் அவசரமாக விழித்துக் கொண்ட தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் இன்று உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படும் என்ற அறிவிப்பு கைவிடப்படுவதாக அறிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பு கழகத் தலைவர் மேற்கொண்ட விரைவான - நேரடியான நடவடிக்கைக்குக் கிடைத்த மகத்தான வெற்றி. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கொல்லைப் புறமாக நுழைந்த இந்தியை தடுத்து விரட்டிய கழகத் தலைவர் தளபதிக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அரசின் இந்த முடிவை கழகத்தின் சார்பில் வரவேற்கும் அதே வேளையில், ஆளுங்கட்சி தவறு செய்யத் துணியும் போதெல்லாம் அதனைத் தட்டிக் கேட்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி அரசியிலைத்தான் திமுக இப்போதும் முன்னெடுத்திருக்கிறது என்பதையும் தமிழ்வளர்ச்சி துறை மாஃபா பாண்டியராஜனுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்'' என்று அறிக்கையில் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.