கொளத்தூரில் வளர்ச்சிப் பணிகள் உள்பட நலத்திட்ட விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “மக்கள் பணி செய்வதில் கொளத்தூர் தொகுதி, மற்ற தொகுதிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி. நம்மைப் பார்த்து மற்ற தொகுதியில் எம்.எல்.ஏ.க்கள் பணிகளைச் செய்வதாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம். 234 தொகுதிகளில் கொளத்தூர் ஒரு தொகுதியாக இருந்தாலும், 233 தொகுதிகளுக்கும் வழிகாட்டும் தொகுதியாக இத்தொகுதி உள்ளது.


நான் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். ஆனால், முதலமைச்சருக்கு வழிகாட்டக்கூடிய ஒருவனாக நான் இருக்கிறேன். வழிகாட்டுவதை அவர் பின்பற்றுகிறாரா என்ற சந்தேகம் இருப்பது வேறு பிரச்னை. ஆனால், திமுக எதிர்க்கட்சி. நாம் அறிவிப்பதைப் பார்த்துதான் ஆளுங்கட்சியினர் அவற்றைச் செய்யக் கூடிய நிலை தற்போது உள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களைப் பொறுத்தவரையில் அதுதான் ஆளுங்கட்சி. அதுதான் உண்மை. இன்னும் மூன்று மாதம் அல்லது நான்கு மாத காலத்தில் நாம்தான் ஆளுங்கட்சியாக வரப் போகிறோம்.


உங்களை எல்லாம் பார்த்த பிறகு எனக்கு அப்படிப்பட்ட நம்பிக்கை தோன்றுகிறது. அந்த அளவுக்கு மக்களிடத்தில் ஒரு எழுச்சியை காணுகிறோம். கடந்த 10 ஆண்டுக்காலம் ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்களைப் பற்றிக் கவலைப்படும் ஓர் இயக்கம் திமுகதான். 2006 - 2011 வரை ஆட்சியில் இருந்தாலும், ஏற்கனவே ஐந்து முறை ஆட்சியிலிருந்து உள்ளோம். ஐந்து முறை ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு என்னென்ன திட்டங்களை உருவாக்கினோம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், இன்று தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்படுகின்றன. தொழிலதிபர்கள்  தொழில் தொடங்க அஞ்சி, பயந்து ஓடக்கூடிய நிலை உள்ளது. அதற்குக் காரணம் கமிஷன், கரப்ஷன், கலெக்சன் ஆட்சி தமிழ்நாட்டில் நடப்பதுதான். அதைத் தடுக்கும் முயற்சியில் நாம் ஈடுபடவேண்டும். அதற்கு ஒரு நல்ல வாய்ப்பு 4 மாத காலத்தில் வருகிற தேர்தல். அந்தத் தேர்தலை நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.