வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உண்மையா அல்லது புனையப்பட்டனவா? என்பது புரியவில்லை. ஆனாலும் அந்த பெருங்கவிஞர் அசிங்கப்பட்டு நிற்கிறார் பொதுவெளியில். அதிலும் அறிவாலயத்து அரசவை கவிஞர்களில் மிக முன்னவர்! என்று விமர்சிக்கப்பட்டவர் அவர். கருணாநிதியிடம் நல்ல பெயர் மட்டுமில்லை, அவரது குடும்பத்தில் ஒருவராகவே வலம் வந்தவராயிற்றே வைரமுத்து. 

கருணாநிதிக்கு வைரமுத்து எந்தளவுக்கு வேண்டப்பட்டவர் என்பதை உணர்த்திட ஒரு வாக்கியம் போதும்...அதாவது, தன் மனைவி தயாளு அம்மாளின் மறைவுக்குப் பின் கோபாலபுரம் இல்லத்தை ஏழை மக்களின் பயன்பாட்டுக்கான இலவச மருத்துவமனையாக்கிட வேண்டும்! என்று உயில் எழுதியுள்ள கருணாநிதி. அந்த செயலை முன்னின்று நடத்திட வேண்டிய பொறுப்பை வைரமுத்து மற்றும் ஆ.ராசவின் கரங்களில்தான் ஒப்படைத்துள்ளார். அப்படியானால் வைரமுத்து, கருணாநிதிக்கு எப்படி நெருக்கமானவர் என்பது புரியும். 

இந்நிலையில், வைரமுத்துவுக்கு நேர்ந்திருக்கும் இந்த நெருக்கடிக்கு தி.மு.க. தரப்பிலிருந்து சொல்லிக் கொள்ளும்படியாக எந்த ரியாக்‌ஷனோ, கைகொடுப்போ இல்லை. தி.மு.க.வின் செயல்பாடு அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் சரிதான் என்றாலும் கூட வைரமுத்துவின் மனம் கேட்கவில்லை இதை ‘தலைவர் கலைஞர் மட்டும் இருந்திருந்தால் என்னை இப்படி நிற்கதியாக விட்டிருப்பாரா? என்னை தி.மு.க.வின் புலவனாகதானே உலகம் பார்க்கிறது. அவர்களே என்னை கண்டு கொள்ளாமல் விட்டால் எப்படி?’ என்று புலம்பிக் கொட்டியிருக்கிறார். 

ஆனால் வைரமுத்துவை ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் விட்டதற்கு வேறு காரணம் சொல்கின்றனர் தி.மு.க.வின் உயர் வட்டாரத்தை நன்கு அறிந்தவர்கள். அவர்கள் “வைரமுத்து தலைவர் கருணாநிதிக்கு மிக நெருக்கமாக இருந்து இலக்கியம் மட்டும் பேசவில்லை, பல நேரங்களில் அரசியலும் செய்திருக்கிறார். கட்சியின் உள் விவகாரங்களில் சிலருக்காக சப்போர்ட் செய்வது, சிலரை பற்றி விமர்சிப்பது என்று நடந்திருக்கிறார். மதுரை அருகே குவாரி விஷயமொன்றில் அன்பழகன் குடும்பத்துடன் உரசுமளவுக்கு வைரமுத்துவின் செயல்பாடு தலைவர் காலத்தில் எங்கள் இயக்கத்தில் இருந்திருக்கிறது. 

அதை அப்போது ஸ்டாலினும் விரும்பவில்லை. ஆனால் தலைவருக்காக பொறுத்துக் கொண்டார். அதெல்லாம் சேர்ந்து இப்போது வைரமுத்துவுக்கு எதிராக நிற்கிறது. ஒரு காலத்தில் வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட எங்கள் கட்சி முக்கியஸ்தர்கள் இப்போது, அதையும் இதையும் சொல்லி ஸ்டாலினின் கைகளை கட்டி வைக்கிறார்கள். ‘வைரமுத்து சிக்கியிருக்கும் விவகாரத்தை தமிழக பெண்கள் சென்சிடீவாக பார்க்கிறார்கள். நாம் அவருக்கு ஆதரவாக ஒரு சொல் சொன்னாலும் அது உங்களை பாதிக்கும் தலைவரே!’ என்று நேக்காக சொல்லி அவரை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.” என்கிறார்கள். 

ஹும்! புலவர்களுக்கு வறுமை வரலாம் ஆனால் இப்படியான வசவுகள் வரக்கூடாது. தன் திறமையால், தமிழால் வறுமையை வென்றவர் வைரமுத்து ஆனால்?...