அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே யார் முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு அமைப்பதில் மோதல் ஏற்பட்டது. செப்டம்பர் 28-ல் நடந்த அதிமுக செயற்குழுக் கூட்டட்தில் இருவரும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து முதல்வர் வேட்பாளர் யார் என்பது அக்டோபர் 7-ம் தேதி அறிவிக்கப்படும் என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார். வழிகாட்டுதல் குழு அமைக்க எடப்பாடி பழனிச்சாமி இறங்கிவந்த நிலையில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்க ஓ.பன்னீர்செல்வமும் இறங்கி வந்தார்.


அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற அதிமுக அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை திமுக விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின்  செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமியின் தவறுகள் அனைத்தும் மக்களுக்கு மிக நன்றாக தெரியும். மத்திய அரசிடமிருந்து மாநில உரிமையைப்பெற முடியாத கையாலாகாதவர் எடப்பாடி பழனிசாமி.

 
எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் முதல்வர் பதவிக்கு இவர் தகுதியற்றவர் என்பது மக்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது. மக்கள் விரோத போக்கு, கையாலாகாத தன்மை கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக ஜெயலலிதாவால்தான் வெற்றி பெற்றது. அதை வைத்து இவர்கள் விளையாடி கொண்டிருக்கிறார்கள். சொந்த முயற்சியால் இவர்கள் யாரும் வெற்றி பெற்றவர்கள் இல்லை. அதிமுகவின் இந்த முயற்சிகளும் ஒருவருக்கொருவர் போடும் போட்டிகளுக்கும் ஒரே காரணம் சசிகலா வெளியில் வர போகிறார் என்பதுதான்” என்று டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.