காஷ்மீரில் வீட்டுச்சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்கக்கோரி திமுக நடத்தும் போராட்டாத்தால் மு.க.ஸ்டாலின் அகில இந்தியாவையும் தாண்டி உலக கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக நடத்தும் போராட்டத்தில் 14 கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை காஷ்மீர் விவகாரத்தில் எந்த கட்சியும் துணிந்து போராட்டத்தில் இறங்கவில்லை.  இந்நிலையில் இன்று திமுக தலைமையில் எம்பிக்கள் எல்லோரும் சேர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

காங்கிரஸ், மதிமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் , பகுஜன் சமாஜ் ஆகிய கட்சி நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். திமுக மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. 

கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சீதாராமன் யெட்சூரி போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அதேபோல் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகனும் சிவகங்கை தொகுதி எம்.பியுமான கார்த்தி சிதம்பரமும் பங்கேற்றுள்ளார். இந்த போராட்டம் காரணமாக டெல்லி ஜந்தர் மந்தரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இன்று போராட்டம் நடத்தும் நபர்கள் அப்புறப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்திராகாந்தி காலத்தில் கொண்டு வரப்பட்ட மிசா கருணாநிதியை இந்திய அளவில் கொண்டு சேர்த்தது. தற்போது மோடி காலத்தில் காஷ்மீர் விவகாரம் தங்கள் தலைவர் ஸ்டாலினை உலக அளவில் கொண்டு சேர்த்துள்ளதாக திமுக தொண்டர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக திமுக போராட்டம் நடத்த இருப்பதை பாகிஸ்தான் ஊடகமான ரேடியோ பாகிஸ்தான் நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது. டெல்லியில் திமுக போராட்டம் நடத்துவதால் மு.க.ஸ்டாலின் அகில இந்திய கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.