dmk protest against beef ban

மத்திய அரசு நாடுமுழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

விவசாய தேவைக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் இறைச்சி வர்த்தகம் முடங்குகிற நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு கேரளா, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசின் இந்த தடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் மக்களுக்கு பிடிக்காததை அரசு செய்யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் மகளிர் அமைப்பினர், தொண்டர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.