இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக  தலைவருமான அமித்ஷா தனது  டிவிட்டர் பதிவில்  ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி  இருக்க வேண்டியது அவசியம். 

தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி,  சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார்.

அமித்ஷாவின் இந்த கருத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராய் விஜயன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி உட்பட பல தலைவர்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக்  கண்டித்து வரும்  20-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.