அனைத்து மாநில நலனும் பாதுகாக்கப்படும் என்கிற மோடி அரசு, தமிழக மக்கள் நீட் தேர்வு ரத்து என்கிற வாக்குறுதிக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதை மனதில்கொண்டு செயல்பட வேண்டியது கட்டாயமாகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:


மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் சமூக நீதியைச் சிதைக்கும் கொடூர ஆயுதமாக இருக்கிறது என்பதை இந்த ஆண்டு நடைபெற்ற நீட்  தேர்வு முடிவுகள் நிரூபிக்கின்றன. நீட் தேர்ச்சி அதிகரித்திருந்தாலும், அதில் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் 7,04,335 என்ற அளவில் உள்ளனர். ஆனால், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 63,749; பட்டியல் இனத்தவர் 20,009 பேர்; பழங்குடியினர் 8,455 பேர் என்ற அளவிலேயே உள்ளார்கள்.
 நீட் தேர்வுக்கு முன்பாக மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளியில் படித்து அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தோரின் எண்ணிக்கை சராசரியாக 25 ஆக இருந்தது. நீட் தேர்வுக்குப் பிறகு அந்த எண்ணிக்கை 5-க்கும் கீழே போய் விட்டது. மாநிலக் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு முன்பாக ஆண்டுதோறும் இரண்டாயிடத்துக்கும் அதிகமான மருத்துவ இடங்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெற்றுவந்தனர். அந்த எண்ணிக்கையும் நீட் தேர்வுக்குப் பிறகு நூறில் ஒரு பங்காக குறைந்துவிட்டது. 


மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் நீட்தேர்வுக்கு முன் ஏறத்தாழ ஒற்றை இலக்கத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சீட் பெற்று வந்தனர். நீட் தேர்வுக்குப் பிறகு 600-க்கும் அதிகமான இடங்களை பிடித்துள்ளனர். கிராமப்புற, ஏழை, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் அதிகம் பயில்வது மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும்தான். அவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு முற்றிலுமாக சிதைத்து ஒழித்து விட்டது. அதனால்தான் அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா எனத் தொடங்கிய நீட் பலிகள், இந்த ஆண்டு திருப்பூர் ரிது, பட்டுக்கோட்டை வைஷ்யா, மரக்காணம் மோனிஷா என அதிகரித்து கொண்டே போகும் அவலம் அபாய கட்டத்தை அடைந்துள்ளது. 


வளர்ச்சி பெற்ற மேலை நாடுகளில் கூட இத்தகைய கடுமையான நுழைவுத் தேர்வு முறைகளினால் ஏற்படும் சமூக பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு அவற்றைக் கைவிட்ட வரலாறு உண்டு. இந்தியாவில் நகர்ப்புறம் சார்ந்த மேல் தட்டு வகுப்பினரின் பிள்ளைகள் பயிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மட்டும் கருத்தில்கொண்டு, ஏழ்மையைச் சுமந்துகொண்டு எளிய சூழலில் மாநிலப் பாடத்திட்டத்திலான  அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது என்பது சரியான ஒப்பீட்டு முறை அல்ல. அது சமநிலை அற்றது. அது மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தி, எளிய மாணவ, மாணவியரின் மருத்துவக் கனவைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. அத்துடன், மாநிலக் கல்வி முறையையும் சீரழிக்கிறது.


கல்வியை, பொதுப்பட்டியலில் இருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரும்போதுதான் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டு, நீட் தேர்வே இல்லாத நிலையை உருவாக்க  வேண்டியது மத்திய அரசின் கடமை. அனைத்து மாநில நலனும் பாதுகாக்கப்படும் என்கிற மோடி அரசு, தமிழக மக்கள் நீட் தேர்வு ரத்து என்கிற வாக்குறுதிக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதை மனதில் கொண்டு, செயல்பட வேண்டியது கட்டாயமாகிறது.
நீட் தேர்வை ரத்து செய்யவும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவும் திமுக நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து பாடுபடும், போராடும். 
இவ்வாறு மு.க. ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துளார்.