இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திடீரென முக ஸ்டாலின் வாபஸ் பெற்று இருப்பத அக்கட்சிக்கு உள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பொதுவான ஒரு மொழியாக இந்தி இருக்க வேண்டும் அப்படி இருந்தால் இந்தியாவிற்கு சர்வதேச அரங்கில் தனி அடையாளம் கிடைக்கும் என்று அமித் ஷா கடந்த வாரம் கூறியிருந்தார். இதனை இந்தியை திணிக்கும் முயற்சி என்று தமிழகத்தில் இருந்து முதல் கலகக் குரல் எழுப்பியது திமுக தான்.

 

அதோடு மட்டும் அல்லாமல் உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு எதிரான போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். நாளை நடைபெறுவதாக இருந்த இந்த போராட்டத்திற்கு ஸ்டாலின் முன்னிலை வகிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. போராட்டத்தின் போது என்னென்ன முழக்கங்கள் எழுப்ப வேண்டும் என்று கூட முரசொலி வாயிலாக திமுக நிர்வாகிகளுக்கு நேற்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்திக்கு எதிரான போராட்டம் என்பதால் மிகப்பெரிய அளவில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திமுக தலைமையிடம் இருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தங்கள் பலத்தை காட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆட்களை திரட்ட ஆயத்தமாகினர். இது ஒருபுறம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு ஒரு மடல் எழுதினார். அதிலும் கூட இந்தி எதிர்ப்பே பிரதானமாக இருந்தது. தொண்டர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் கேட்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து ஒரு இயல்புக்கு மாறான சூழலை உருவாக்குவது என்கிற திட்டம் திமுகவிடம் இருந்ததாக சொல்கிறார்கள். 

இந்த விவரத்தை உளவுத்துறை மோப்பம் பிடித்துவிட விவரம் டெல்லி வரை சென்றுள்ளது. மேலும் இந்தி எதிர்ப்பு என்று தமிழகத்தில் திமுக தொடங்கும் போராட்டம் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா வரை பரவ வாய்ப்பு இருப்பதாக நோட் போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தி திணிப்பை தான் கூறவில்லை என்றும் இந்தியை இரண்டாவது மொழியாக கற்க வேண்டும் என்று கூறியதாகவும் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது இந்தியை இந்தியாவின் பொதுவான மொழியாக்க வேண்டும் என்று கூறியவர் 2வது மொழியாக இருக்க வேண்டும் என்று கூறியதாக தன்னுடைய நிலைப்பாட்டை அதிரடியாக மாற்றினார். அந்த அளவிற்கு திமுகவின் போராட்ட அறிவிப்பு ஒரு வித வீச்சை ஏற்படுத்தும் என்கிற கலக்கம் டெல்லிக்கு இருந்துள்ளது. இதற்கிடையே திமுக போராட்டத்தை நடத்தக்கூடாது என்கிற அசைன்மெண்ட் ஆளுநர் பன்வாரிலாலிடம் கொடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.

இதனை அடுத்தே அவசர அவசரமாக ஸ்டாலினை தொடர்பு கொண்டதாக கூறுகிறார்கள். மேலும் பன்வாரிலால் நேரடியாக ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசியதாகவும் சந்திக்க விரும்பவுதாகவும் கூறியதாகவும் இதனை அடுத்த ஸ்டாலின் ஆளுநர் மாளிகை சென்றதாகவும் சொல்கிறார்கள். உள்ளே பன்வாரிலால் என்ன வாக்குறுதி கொடுத்தார் என்கிற விவரத்தை அறிய முடியாத சூழலில் திமுக போராட்ட அறிவிப்பை ஒத்திவைத்திருப்பது பலரையும் புருவங்களை உயரச் செய்தது.

காரணம் அமித் ஷாவின் விளக்கம் ஆளுநருடனான சந்திப்பு போன்றவை மட்டுமே இந்த போராட்ட வாபஸ் முடிவுக்கு காரணமாக இருக்காது. அதைத்  தாண்டி ஏதோ ஒரு அரசியல் ரீதியிலான வாக்குறுதி திமுகவிற்கு அளிக்கப்பட்டிருக்கலாம் அதனால் தான் திமுக முன் வைத்த காலை பின் வைத்ததாக பேசிக் கொள்கிறார்கள். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இந்தி எதிர்ப்பு போராட்ட முடிவில் அடித்த யு டர்ன் ஆ.ராசா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை குழப்பம் அடைய வைத்துள்ளதாக பேசிக் கொள்கிறார்கள்.