உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அதனை அவரே மறுத்துவிட்டதாகவும், ஸ்டாலின்தான் அப்படிச் சொல்வதாகவும் முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். அமைச்சருக்கு நோய்த்தொற்று இல்லை என்றால் அது மகிழ்ச்சிக்குரியதுதான். மருத்துவமனையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்த மறுநாள் அவரை நான் தொடர்பு கொண்டு பேசினேன். அவரிடம் செய்தியை உறுதிப்படுத்திய பிறகு அவர் நலமடைய வேண்டி ‘ட்விட்டர்’செய்தி வெளியிட்டேன். அமைச்சருக்கே கொரோனா என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும், வழக்கம் போல் முதல்வர் மறைக்க முயற்சிக்கிறார். 

எடப்பாடி பழனிசாமி இன்னமும் ‘சேலம் யூனியன் பிரதேச முதலமைச்சரைப்’போலத்தான் நடந்து கொள்கிறாரே தவிர, தமிழக முதலமைச்சராக எப்போது தன்னை நினைக்கப் போகிறார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி, அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, தமிழ்நாட்டில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதுவரை 88 நாட்கள், ஊரடங்கு - ஊரடங்கிற்குள் ஊரடங்கு - படிப்படியாகத் தளர்வுகள் - தீவிரமான முழு ஊரடங்கு என்று நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன; ஆனால் நோய்த் தொற்று மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. 
இப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஜூன் 30-ம் தேதியுடன் இந்த ஊரடங்குக் காலம் முடிவடையும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்குள் கொரோனா நோய்த் தொற்று முடிந்துவிடுமா என்று பார்த்தால் அதற்கான சிறிய அறிகுறிகூடத் தென்படவில்லை. நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. 1000 -1500 -2000 என்று மிக மோசமான எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போகிறது.


வெளிமாவட்டங்களில் தொற்று குறைவு என்றும் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர். பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்திருப்பதாக இன்றைய தினம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. நேற்றைய தினம் ஒரே நாளில் 2396 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது என்றால், அதில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1254 பேர்தான். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 1142 பேர் என்கிறது அரசின் அறிவிப்பு. பிறகு எப்படிப் பிற மாவட்டங்களில் தொற்று குறைவு என்று சொல்ல முடியும்?சென்னையில் மட்டுமே அதிகமாக இருந்த பரவல், இப்போது பிற மாவட்டங்களிலும் அதிகமாகி வருவதை இது காட்டவில்லையா?
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அதனை அவரே மறுத்துவிட்டதாகவும், ஸ்டாலின்தான் அப்படிச் சொல்வதாகவும் முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். அமைச்சருக்கு நோய்த்தொற்று இல்லை என்றால் அது மகிழ்ச்சிக்குரியதுதான். மருத்துவமனையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்த மறுநாள் அவரை நான் தொடர்பு கொண்டு பேசினேன். அவரிடம் செய்தியை உறுதிப்படுத்திய பிறகு அவர் நலமடைய வேண்டி ‘ட்விட்டர்’செய்தி வெளியிட்டேன். அமைச்சருக்கே கொரோனா என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும், வழக்கம் போல் முதல்வர் மறைக்க முயற்சிக்கிறார். ஆனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கும் அமைச்சர் அன்பழகனுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது என்று ‘ட்விட்’ செய்திருந்தாரே அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
எவ்வளவு பரிசோதனைகள் செய்துள்ளீர்கள் என்பதை மாவட்ட வாரியாகக் கொடுங்கள் என்று தொடக்கத்திலிருந்து சொல்லி வருகிறேன். ஒரே ஒருநாள் மட்டும் அப்படிக் கொடுத்தார்கள். பிறகு நிறுத்திவிட்டார்கள். நேற்றைய தினம் மாவட்ட வாரியாக எண்ணிக்கையைக் கொடுத்துள்ளார்கள். நோய்த் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களை விட்டுவிட்டு நோய்த் தொற்று குறைவாக உள்ள சேலம் மாவட்டத்தில் அதிகமான சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 3620 பேர் பாதிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 20,050 சோதனைகளும், 1095 பேர் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12,983 சோதனைகளும், 2414 பேர் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் 13,981 சோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. 323 பேர் பாதிக்கப்பட்ட சேலம் மாவட்டத்தில் மட்டும் 31,019 பேருக்குச் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகள் என்று நான் கேட்கவில்லை. அதிகம் பேர் பாதிக்கப்பட்ட மாவட்டத்துக்கு ஏன் அதிக சோதனைகள் நடத்தப்படவில்லை என்று கேட்கிறேன்.
சேலம் பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு மட்டும் பாதுகாப்பு உடைகள் வழங்கியதைப் போல, சேலத்துக்கு மட்டும் பரிசோதனை செய்தால் போதுமா? எடப்பாடி பழனிசாமி இன்னமும் ‘சேலம் யூனியன் பிரதேச முதலமைச்சரைப்’போலத்தான் நடந்து கொள்கிறாரே தவிர, தமிழக முதலமைச்சராக எப்போது தன்னை நினைக்கப் போகிறார்? அரசின் நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். கொரோனா காலத்தில் மதுக்கடைகளைத் திறப்பதையும், 9 லட்சம் மாணவ மாணவியரையும் 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களையும் வீட்டை விட்டு வெளியே வரவைத்துப் பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்த வேண்டுமா என்பதையும்தான் கேட்டோமே தவிர; மற்றபடி அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு நாங்கள் ஒத்துழைப்புத் தந்தே வருகிறோம்.


அரசாங்கத்தின் எந்த நடவடிக்கையையும் நாங்கள் தடுக்கவில்லை. அரசின் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல, இன்னும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாக வேண்டும். அதற்கான ஆலோசனைகளைத்தான் சொல்லி வருகிறேன். இந்த ஆலோசனைகள் நாட்டு நலன் கருதி, தமிழ் மக்கள் நலன் கருதிச் சொல்லப்படுபவை. இந்த ஆலோசனைகளைக் கூட அரசியல் உள்நோக்கத்தோடு முதலமைச்சர் பார்க்கிறார். இதனை அவர் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.