கொசுக்களைக் காட்டி கோடி கோடியாக கொள்ளை அடிக்க முடியும் என்பதற்கு  எடுத்துக்காட்டுதான் அதிமுக ஆட்சி என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
ஊரக உள்ளாட்சிகளுக்கு டிச. 27 மற்றும் 30 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக அமைச்சர்கள், அந்தந்த கட்சிளின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கட்சித் தலைவர்கள் காணொளி மூலம் பிரசாரங்களைச் செய்துவருகிறார்கள். அந்த வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் திமுக கூட்டணிக்கு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், “தமிழகத்தில் 2016ல் நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் தற்போதுதான் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் தமிழகத்தில் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி என எல்லா இடங்களிலும் ஒரே சமயத்தில்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. தற்போது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் என்கிறார்கள். கிராமங்களிலாவது முறையாகத்  தேர்தலை நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை.
நீதிமன்ற உத்தரவுப்படி வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு என எதையுமே உருப்படியாக செய்யவில்லை. அதுமட்டுமா, மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர்  பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என்று திடீர் அறிவிப்பை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். குழப்பத்துக்கு மேல் குழப்பம், குளறுபடிகளை செய்துதான் ஊராட்சித் தேர்தலை நடத்துகிறார்கள். மக்கள் மாட மாளிகை, கூடகோபுரம், வண்டி வண்டியாகப் பணம் போன்றவற்றையா கேட்கிறார்கள்? குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலைவசதி, முதியோர் பென்ஷன் கிடைக்கவில்லை என்று எளிதில் தீர்க்கப்படக்கூடிய சாதாரண  குறைகளைத்தான் சொல்கிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடைபெற்றிருந்தால் இந்தக் குறைகள் 60 சதவீதம் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும். டெங்குவால் ஏற்பட்ட மரணங்கள் எத்தனை தெரியுமா? முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே டெங்கு பாதிப்பால்  ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். டெங்குவைத் தடுப்பதற்கு பதிலாக டெங்கு விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வதாகக் கூறி அதிலும் கொள்ளை அடித்தார்கள். கொசுக்களைக் காட்டி கோடி கோடியாக கொள்ளை அடிக்க முடியும் என்பதற்கு  எடுத்துக்காட்டுதான் இந்த ஆட்சி.
இப்படி கொள்ளை அடிக்கத்தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்தி வந்தார்கள். தேர்தல் நடத்தினால் திமுக வெற்றி பெற்றுவிடும் என்ற பயம் முதல் காரணம். உள்ளாட்சிப்  பிரதிநிதிகள் வந்துவிட்டால் வழக்கம் போலக் கொள்ளை அடிக்க முடியாது என்பது இரண்டாவது காரணம். இதனால் துன்பப்படுவது என்னவோ மக்கள்தான்.

 
எந்த மாநில முதல்வர் மீதும் பதவியில் இருக்கும்போதே கொலைப் புகார் வந்ததில்லை. கொள்ளைப் புகார் வந்ததில்லை. இங்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் எனப் பலர் மீதும் ஊழல் புகார்கள், விசாரணைகள், வழக்குகள் என  தமிழ் நாடு அமைச்சரவையே ஒரு கிரிமினல் கேபினெட்டாக இருக்கிறது. இது தமிழகத்துக்கு அவமானம் இல்லையா? இப்படிப்பட்டவர்களிடம் இருந்து நாட்டை மீட்பதற்கான முன்னோட்டம்தான் உள்ளாட்சித் தேர்தல். எனவே, இந்த ஊழலாட்சிக்கு முடிவுகட்ட உள்ளாட்சித்தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பீர்” என்று காணொலி காட்சியில் ஸ்டாலின் பேசியுள்ளார்.