படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது என்று அதிமுக அரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திமுக வாக்குறுதி அளித்தது. அதிமுகவோ படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று பிரசாரம் செய்தது. தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியைப் பிடித்ததும், 500 டாஸ்மாக் கடைகளை மூட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதேபோல, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகப் பதவியேற்றபோது 500 கடைகளை மூட உத்தரவிட்டார். 
இதற்கிடையே உச்சநீதிமன்ற உத்தரவுபடி தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 1,500 மதுக்கடைகளை மூடும் கட்டாயம் தமிழகத்தில் ஏற்பட்டது. ஆனால், மூடப்பட்ட கடைகளுக்கு மாற்றாக வெவ்வேறு இடங்களில் புதிய மதுக்கடைகளை தமிழக அரசு திறந்தது. குடியிருப்புப் பகுதிகளில்கூட டாஸ்மாக கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது புகார்களும் எழுந்தன. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் புதிதாக 2,295 டாஸ்மாக் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 3ஆண்டில் 2000-க்கும் மேலான #TASMAC புதிதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் 200 கடைகள் திறக்கப்பட உள்ளனவாம்! படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது?சட்டப்பேரவையிலும்,மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று; செய்வது வேறு என அதிமுக போட்டு வரும் இரட்டை வேடம் இது!” என ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.