வன்னியர் சமுதாயத்துக்கு திமுக ஆட்சியில் செய்த நன்மைகளை பட்டியலிட்டு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 21 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட்டுள்ள திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஸ்டாலின், “தற்போதைய ஆட்சி அடிமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது ஒரு கொள்ளை கூடார ஆட்சி. எல்லாத் துறைகளிலும் ஊழல் நடைபெற்றுவருகிறது. குப்பையில்கூட ஊழல் செய்யும் ஆட்சிதான் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. 
திமுக கடந்த 8 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக உள்ளது.‌ பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை இயக்க மக்களுக்காக திமுக பாடுபடும் என அண்ணா தெரிவித்தார்.‌ விக்ரவாண்டி தொகுதி மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் பகுதி. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தவர் கருணாநிதிதான். 1987-ல் இட ஒதுக்கீடு  நடைபெற்ற போராட்டங்கள் இந்தப் பகுதியில் நடைபெற்றது. அப்போது 25 பேர் மாண்டுபோனார்கள். அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக இதைப் பற்றி சிந்திக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் இறந்தவர்கள் குடும்பத்துக்கு 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
இட ஒதுக்கீட்டுக்காக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திமுக ஆட்சியில்தான் வாபஸ் பெறப்பட்டது. வன்னியர் சமுதாயத்துக்காகப் பாடுபட்ட ராமசாமி படையாச்சியாருக்கு சென்னை அண்ணா சாலை கிண்டி அருகே  சிலையை அமைத்தவர் கருணாநிதிதான். வன்னியர் சமூகத்தைச் சார்ந்த பல்வேறு தலைவர்கள் திமுக ஆட்சி காலத்திலும் மத்திய அரசில் கூட்டணியில் அங்கம் வகித்தபோதும் முக்கிய பொறுப்புகளில் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.‌


வன்னியர் சமுதாயத்திற்காக பல்வேறு சாதனைகளையும் பல்வேறு திட்டங்களையும் படைத்தவர்தான் கருணாநிதி. அந்தச் சமுதாயத்தை பயன்படுத்தி இந்த சமுதாயத்தின் உழைப்பைப் பயன்படுத்தி கொள்ளை அடித்துக்கொண்டிருப்பவர்கள் நம்மை குறை கூறுகிறார்கள். தற்போது கரும்பு விவசாயம் செய்தவர்கள் கடன்களை திரும்ப தர முடியாத ஒரு சூழலில் உள்ளார்கள்.‌ அதற்குக் காரணம் கரும்பு நிலுவைத் தொகை வழங்காததே. இந்த நிலை மாற திமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும்” என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.