இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நாடே கொரோனா தொற்று நோய்ப் பரவலின் பாதிப்புகளால் தத்தளித்துக் கொண்டும், பொருளாதாரம் தேக்கமடைந்தும் உள்ள இந்தத் தருணத்தில், நாடாளுமன்றத்தில் ஆலோசனையோ, விரிவான விவாதமோ செய்யப்படாமல், தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்க ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கப்பட்டிருப்பது, ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாட்டின் மதிப்பைக் குறைப்பதாக உள்ளது.


கல்வி என்பது மாநிலங்களின் தலையீடு மற்றும் பரவலாக்கத்தின் வழியாக மட்டுமே சிறப்பாக செயல்படுத்தக்கூடிய முக்கிய மற்றும் பொருள் பொதிந்த துறை. நமது தேசத்தை உருவாக்கிய தலைவர்கள்கூட, கல்வியில் மாநில அரசுகளுக்கான பங்கை அங்கீகரித்து, அரசமைப்புச் சட்டத்தின் படி, கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்த்திருந்தனர். 1976ம் ஆண்டு அவசர நிலையின் போது, கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட நடவடிக்கை, கல்வி தொடர்பாக சட்டமியற்றும் மாநில அரசுகளின் பொறுப்பை, மத்திய அரசும் பகிர்ந்து கொள்ள வழிவகுத்தது. இதற்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை போராடிய கருணாநிதி, நீண்ட காலமாக நாங்கள் மதித்துப் போற்றிவரும் சமூகநீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கு, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் கொண்டு வந்து சேர்ப்பது அவசியம் என உறுதியாக நம்பினார்.
தற்போதைய கல்விக் கொள்கை குறித்த மத்திய அரசின் ஒருதலைப் பட்சமான முடிவானது, இந்திய ஒன்றியத்தின் அடிப்படையான கூட்டாட்சித் தத்துவத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு 2019ம் ஆண்டு பொதுமக்களின் கருத்தறிய முன்வைக்கப்பட்ட போது, அதன் பல அம்சங்களை திமுக எதிர்த்ததுடன், அதற்கான பரிந்துரைகளையும் மத்திய அரசிடம் வழங்கியது. ஆனால், தேசிய கல்விக் கொள்கை 2020, 2019 ஆண்டு வரைவில் இருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதாக இல்லை; அதில் எங்களது எந்தப் பரிந்துரைகளும் சேர்க்கப்படவில்லை.


இந்தத் தேசிய கல்விக் கொள்கை, மாநிலங்களுக்கான அதிகாரங்களின் மதிப்பைக் குறைத்து, நாட்டில் சமூகநீதி, சமத்துவத்திற்கு கூடுதல் தடைகளை உருவாக்குவதன் மூலம், கல்வியைப் பெறுதல், உள்நுழையும் வாய்ப்பு மற்றும் தரம் ஆகிய இதுவரை அடைந்த முன்னேற்றங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அனைவரையும் ஒரே அளவுகோலுக்குள் பொருத்தப் பார்க்கும் இந்தக் கல்விக் கொள்கை, நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், அனைத்து பின்னணிகளில் இருந்தும் வரும் மாணவர்கள் கல்வியை அணுகுவதில் தேவையற்ற கூடுதல் தடைகளை ஏற்படுத்துகிறது.


இக்கல்விக் கொள்கை இந்தியாவில் கல்வியை முன்னேற்றும் நோக்கத்துடன் வடிவமைக்கப்படவில்லை. அரசியலமைப்பு, கூட்டாட்சி மற்றும் சமூகநீதிக்கு எதிரான இந்தக் கொள்கை, இதுவரை நம் நாடு கல்வியில் அடைந்த முன்னேற்றத்திற்கு அதிகத் தீங்கையே விளைவிக்கும். மத்தியில் அதிகாரத்தை குவித்தல், மாநிலங்களின் குரல்களைப் புறக்கணிக்கத்தல் ஆகிய இத்தகைய முடிவுகள், இந்த நாட்டுக் குடிமக்களின் நலன்களுக்கு எதிரானவை.
சமூகநீதியைக் காக்க உறுதிபூண்ட ஒரு கட்சியின் தலைவர் மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்புகளைக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவன் என்ற முறையில், தேசிய கல்விக் கொள்கை 2020, நம் நாட்டின் அடிப்படையான மதிப்பீடுகள் அனைத்தையும் சிதைக்கக்கூடிய வகையில் உள்ளதாகவே நம்புகிறேன். நாடு முழுவதும் உள்ள நமது குழந்தைகள் அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கல்வி உரிமையை உறுதிப்படுத்தவும், அதனை நீங்கள் முழுமையாக உணரவும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.
1. நம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள குடிமக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் இந்தக் கொள்கை குறித்து விவாதிக்க மற்றும் விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்ய, மாநிலங்கள் மற்றும் மத்தியில் இருந்து தொடர்புள்ள அனைத்துத் தரப்பினரும் பங்கேற்பதற்கான ஓர் ஆலோசனைச் செயல்முறையை மீண்டும் நிறுவுங்கள்.


2. தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ மறுவடிவமைத்து, நாடாளுமன்ற அமர்வின் மூலம், நமது நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகம், கூட்டாட்சிமுறை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நடைமுறையை உத்தரவாதப்படுத்துதல் ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்துங்கள்.
நமது அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிய செயல்முறைகளைப் பின்பற்றுவதற்கு உகந்த சூழ்நிலை ஏற்படும் வரை தேசியக் கல்வி கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்தும் முடிவை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த விவாதம் மற்றும் கலந்துரையாடல் செயல்முறைகள் நமது ஜனநாயகத்தின் வெற்றிகரமான செயல்பாட்டிற்கு மையமானவையாகவும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நலன் பயக்கக் கூடியவையாகவும் இருக்கும்” என்று கடிதத்தில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.