கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா  நடைபெற்றது. இந்த விழாவில் காணொலி காட்சி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், “விவசாயிகளின் வாழ்வை நசுக்க நினைக்கிறது மத்திய அரசு. அதற்காகவே வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக சட்டத்தைக் கொண்டுவந்துவிட்டு விவசாயிகள் ஆதரிக்கவேண்டும் என்று பாஜக எதிர்பார்க்கிறது. அச்சட்டத்தை ‘நானும் விவசாயிதான்’ என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமியும் ஆதரிக்கிறார். அந்த மூன்று சட்டங்களும் நிறைவேறினால் வேளாண்மை சிதைந்து போய்விடும். விவசாயிகளின் வாழ்க்கை இருண்டுபோய்விடும். அதனால்தான் அச்சட்டங்களை நாங்கள் எதிர்க்கிறோம்.

 
ஆனால், எடப்பாடி பழனிசாமி, ‘ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியுமா?’ என்று கேட்கிறார். நான் விவசாயி என்று சொன்னேனா, விவசாயம் செய்வதாக சொன்னேனா? இல்லையே? விவசாயிகளின் கஷ்டம் தெரிவதற்கு விவசாயியாகத்தான் இருக்கவேண்டும் என்று எதுவும் இல்லை. விவசாயத்தின் மீதும் விவசாயிகளின் மீதும் அக்கறை இருந்தால் போதும். அது என்னிடம் இருக்கிறது. மாநில அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்வதை தடுக்க முடியாத எடப்பாடி பழனிசாமிக்கு தன்னை விவசாயி என்று சொல்லி கொள்ளும் தகுதி நிச்சயமாக கிடையாது.  நானும் விவசாயிதான் என்று சொல்வதெல்லாம் ஊரை ஏமாற்றும் செயல்.
பொருளாதாரத்தை தரை மட்டமாக்கிவிட்டு இப்போது வேளாண்மைத் துறையைப் பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். கடந்த நான்கு ஆண்டு காலமாக ஆட்சியே நடக்கவில்லை. அதிமுக என்ற கட்சியை கோட்டையில் வைத்து, நடத்திக்கொண்டு இருந்தார்கள். முதலில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் சண்டை வந்தது. அடுத்து எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் சண்டை வந்தது. இதுதான் நான்காண்டு காலமாக தமிழ்நாட்டில் நடந்த்கொண்டிருக்கிறது.


எப்போது யார் காலை வாருவார்கள் என்ற பயத்திலேயே ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வமாக இருந்தாலும் சரி, எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் சரி, காலில் விழுந்து பதவியை வாங்கியவர்கள் என்பதால்தான் ஒருவர் காலை இன்னொருவர் வாருவது அவர்களுடைய பிறவிக்குணமாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட ஆட்கள் ஒன்று சேர்ந்துள்ளார்கள் என்றால் என்ன அர்த்தம்? மக்களுக்காகவா ஒன்று சேர்ந்துள்ளார்கள்?, அல்ல.
ஆட்சி முடிய இன்னும் 6 மாதங்கள் உள்ளன. அதுவரை ஒன்றாக சேர்ந்து கொள்ளையடிப்போம் என்பதற்காகவே ஒன்று சேர்ந்துள்ளார்கள். இன்று நடந்துக்கொண்டிருப்பது ஆட்சி அல்ல, வீழ்ச்சி. இந்த வேதனை ஆட்சி விரைவில் முடிவுக்கு வர வேண்டும். இந்த வீழ்ச்சி விரைந்து தடுக்கப்பட வேண்டும். அதற்கான பிரசாரப் பணியை நீங்கள் எல்லோரும் தொடர்ந்து செய்யவேண்டும். கொள்ளை கூட்டத்தை கோட்டையை விட்டு வெளியேற்றும் ஜனநாயக போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்