ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை உள்ளிட்டவற்றில், தினமும் கொரோனாவிற்காக அனுமதிக்கப்படுவோர் எத்தனை பேர்? இந்த மருத்துவமனைகளில் உள்ள வெண்டிலேட்டர்கள் எத்தனை? நோயால் பாதிக்கப்பட்ட எத்தனைப் பேர் வெண்டிலேட்டரில் இருக்கிறார்கள்? கொரோனா நோயால் ஏற்படும் மரணங்கள் எத்தனை? பிற நோய்களால் ஏற்படும் மரணங்கள் எத்தனை என்பது போன்ற தகவல்கள் ‘கொரோனா மாநில கட்டுப்பாட்டு அறை’ செய்தி அறிக்கையில் இடம்பெறுவதே இல்லை. தலைநகர் சென்னையில் ‘கொரோனா’ கோரத் தாண்டவமாடும் நேரத்தில்கூட, வெளிப்படைத்தன்மையுடன் தகவல்களை வெளியிட வேண்டும் என்ற மனசாட்சி இந்த அரசுக்கு எள்ளளவும் இல்லை.
சென்னை மாநகரத்தில் மட்டும், 20 ஆயிரத்தைத் தாண்டிவிட்ட கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க முடியாமல், அதிமுக அரசின் நிர்வாகமே தற்போது ‘வெண்டிலேட்டரில்’ இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “50 சதவீதம் கொரோனா மரணங்களை, அதிமுக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் மறைத்து விட்டனர்” என்று ‘தினகரன்’ நாளிதழில் இன்று வெளிவந்துள்ள செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது. “ஜூன் 4-ம் தேதிவரை 398 பேர் சென்னையில் கொரோனா தொற்றுநோய்க்கு இறந்திருப்பதாக உளவுத்துறை தெரிவிப்பதாகவும்”; “அரசின் சார்பில் வெளியிடப்படும் கணக்கு 167 மட்டுமே என்றும்” வெளிவந்திருக்கும் அந்தப் பேரிடியான செய்தி, கொரோனா நோய் பெருந்தொற்றின் அபாயத்தை வெளிப்படுத்துகிறது.
கொரோனாவைக் கையாளுவதில், ‘குழப்பம்’ எனும் கழிவைக் கொட்டி அதன்மேல் அமர்ந்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ‘விபரீதமான’ நிர்வாகத் திறமையின்மை, வெளிச்சம் போட்டு நிற்கிறது. இறப்பு எண்ணிக்கையைக்கூட இதயமற்ற முறையில் இருட்டடிப்பு செய்யும் அதிமுக அரசின் செயல், ‘கோணலுற்ற செயலுக்கு நாணுவதில்லை’ என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளைத்தான் நினைவுபடுத்துகிறது. ‘வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும்’ அரசின் நடவடிக்கை, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் உயிரைப் பறிக்கும் மிக முக்கிய காரணியாக அமைந்து விட்டதோ என்ற சந்தேகத்தை அதிகரிக்கும் வகையில் மரணங்களின் எண்ணிக்கை அமைந்திருக்கிறது.
“அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இருக்கின்றன; இந்தியாவிலேயே அதிக வெண்டிலேட்டர்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு” என்றெல்லாம் முதலமைச்சர், மார்தட்டிப் பேசி வருகிற சூழலில், ஏன் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ‘வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்தி அனுப்புகிறார்கள்? அப்படி வீட்டுக்குச் சென்றவர்களில், திடீர் மூச்சுத்திணறல் என்று மருத்துவமனைக்குத் திரும்பி வந்தோருள் எத்தனை பேரின் உயிர் போயிருக்கிறது? இதற்கெல்லாம் அரசிடம் போதிய புள்ளிவிவரங்கள் உண்டா? “அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு, ஐந்து தினங்கள் அங்கே இருந்து, இறந்தால் மட்டுமே கொரோனா மரணக் கணக்காகக் காட்டப்படுகிறது” என்பது எவ்வளவு அபத்தம், அபாயகரமான அணுகுமுறை?