திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் 'தமிழகம் மீட்போம்'  என்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார். “எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி வேலுமணி, தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பணன் போன்றோர்கள் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்ற போதும் எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், எதுவும் செய்யவில்லை. அத்திக்கடவு அவிநாசி திட்டம் கருணாநிதியால்  கொண்டு வரப்பட்ட திட்டம். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தான் நிறைவேற்றியதாக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அது உண்மையல்ல.
எஸ்.பி வேலுமணி, தங்கமணி போன்றோர் சம்பாத்தியம் செய்வதில்தான் குறியாக உள்ளனர். மக்களுக்கு நலன் செய்யவில்லை. எஸ்.பி வேலுமணி உள்ளாட்சி துறையில் பல்வேறு டெண்டர்களில் முறைகேடு செய்து பணம் சேர்த்து வருகிறார். பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்துள்ளார். இவர் மீதான ஊழலை விசாரிக்கவே தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். அரசியல் ரீதியாக விமர்சனம் செய்பவர்கள் மீதும் அதிகார அத்துமீறல் செய்கிறார். அதே போல் தரமில்லாத நிலக்கரி , மின் வாரியத்திற்கான உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் செய்து வருகிறார் அமைச்சர் தங்கமணி. முதலமைச்சருக்கும் , கல்வி அமைச்சருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதே சந்தேகம்தான்.
கல்வித்துறையில் முதல்வருக்கும் அமைச்சருக்கும் பல்வேறு முரண்கள் இருக்கின்றன. 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு போராடியதற்காக அடித்து துன்புறுத்தியது எடப்பாடி பழனிசாமி. வேளாண் மசோதாவிற்கு ஆதரவு அளித்த விவசாயிகளின் பச்சை துரோகி முதல்வர் எடப்பாடி பழனிசாமி. திருப்பூரில் தொழில் வளர்ச்சி பெரிதளவில் இல்லாமல் போக அரசுகளின் தவறான பொருளாதார கொள்கை தான் காரணம். டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் தற்போது டல் சிட்டியாக உள்ளது. 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற போவதாக செய்திகள் வருகிறது.

மத்தியல் பா.ஜ.க வந்ததில் இருந்தே தொழிலாளர்கள் விரோத கொள்கையையே கொண்டுள்ளது. கார்ப்பரேட்க்கு நாட்டை விற்பவர்கள், எங்களுக்கு நாட்டுப்பற்றை விளக்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் விரும்பும் தேசத்தில் சாதி, மதம் இல்லாமல் எல்லார்க்கும் எல்லாம் என்பதே. திமுக ஆட்சி அமைந்ததும் பல்வேறு தொழில் துறையை சேர்ந்த வல்லுநர் குழு ஒன்றை உருவாக்கி , அவர்கள் சொல்லும் ஆலோசனையின் பேரில் தொழில் சிறக்க ஆட்சி செய்யப்படும்.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.