தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களது பிறந்ததினமான இன்று, அவர் அரசியலில் கடந்து வந்த பாதை மற்றும் அரசியல் பயணம் ஆகியவை குறித்து பார்ப்போம். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வரும் அரசியல் சாணக்கியருமான மு.கருணாநிதியின் மகனாக இருந்தாலும் கூட, தந்தையின் பெருமையை வைத்து எளிதாக வந்துவிடவில்லை. திமுகவில் சாதாரண தொண்டனாக இருந்து, மாணவரணி, இளைஞரணி என படிப்படியாக கட்சிக்காக அரும்பணியாற்றித்தான் திமுகவின் தலைவராக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலினின் அரசியல் பாதை பூப்பாதையாக அமையவில்லை; முள்பாதையாகத்தான் இருந்திருக்கிறது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் அரசியல் பாதையை அறிவோம்.

1966ஆம் ஆண்டு முதல் தனது 13-வது வயதில் இருந்து திமுக சார்பில் பொதுக்கூட்டங்களை நடத்தி, பிரச்சாரங்கள் மேற்கொண்டு கழகப்பணி ஆற்றிவருகிறார் ஸ்டாலின். 

1967-1968 ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராக இருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக்கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையும் செய்து வந்தார். கோபாலபுரம் இளைஞர் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை அழைத்து நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் தான் முதல்முறையாக மேடையில் உரையாற்றினார் ஸ்டாலின்.

1967 முதல் திமுகவில் தீவிரமாக செயல்பட்டுவந்த ஸ்டாலின் 1974ம் ஆண்டு பொதுக்குழு உறுப்பினராக தேர்வானார். தனது அரசியல் பயணத்தின் ஆரம்பக்கட்டத்தில் கட்சிக்காக பலமுறை சிறை சென்றுள்ள ஸ்டாலின், 1976ம் ஆண்டு மிசா சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைபட்டு, பல சித்ரவதைகளுக்கு ஆளானார்.

திமுக சார்பில் பல போராட்டங்களை முன்னெடுத்து தீவிரமாக நடத்தியவர் ஸ்டாலின். 1981ம் ஆண்டு கைலாசம் விசாரணை கமிஷன் சட்ட நகலை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார். 1983ம் ஆண்டு ஈழத்தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை உயர் ஆணையர் அலுவலகத்தின் முன் மறியல் செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.

கைதுகளுக்கெல்லாம் அஞ்சாத மு.க.ஸ்டாலின், தமிழர்களின் நலனுக்காக பல போராட்டங்களை நடத்தி சிறைக்கு சென்றுவந்திருக்கிறார். 

1985ம் ஆண்டு திமுகவின் இளைஞரணி செயலாளராக தேர்வான ஸ்டாலின், அதே ஆண்டில் சட்டமன்ற திமுக அலுவலகத்தைக் கைப்பற்றுவதை எதிர்த்துப் போராடி கைதானார். 1987ம் ஆண்டு இந்தி திணிப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தி கைதானார். 1987ம் ஆண்டு சென்னை மாநகரில் குடிநீர் பிரச்னைக்காக போராடியபோதும், 1987ம் ஆண்டு வெடிகுண்டு சட்டப்பிரிவிலும் கைதானார். 

திமுக சார்பில் மக்களுக்காக தொடர்ந்து கடுமையாக போராடிவந்த ஸ்டாலினுக்கு 1989ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் வெற்றி பெற்ற ஸ்டாலின், 3 முறை ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தார். 

1992ம் ஆண்டு ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அறக்கட்டளையை அரசு ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினார். 1993ம் ஆண்டு ரயில் நிறுத்தப் போராட்டம் மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். 

1994ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியை கண்டித்து நெல்லையில் மறியல் போராட்டம் நடத்தி கைதானார். அதே ஆண்டில், 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி சென்னை அண்ணா தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் காஞ்சிபுரத்தில் கைது, துரோகிகளுக்கு துணை போகும் போலீஸை கண்டித்து மறியல் என்று மறியல் நடத்தியதற்காக கைது என 1994ம் ஆண்டு பல முறை கைதானார். 1995ம் ஆண்டு சேஃப்கார்ட் ரிசர்வேஷன் சட்டத்திருத்தம் கோரி சென்னை எழும்பூர் இரயில் நிலையம் முன்பு மறியல் செய்து கைதானார்.

1996ம் ஆண்டு சென்னை மாநகர மக்கள் தேர்வு செய்த முதல் மேயராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், சென்னை மாநகரில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தினார். சென்னை மாநகராக மேயராக ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்ட ஸ்டாலின், 2002ம் ஆண்டு வரை மேயராக பணியாற்றினார்.

2003ம் ஆண்டு திமுக-வின் துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின், அதே 2003ம் ஆண்டில் ராணி மேரி கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக நடத்திய போராட்டம், முரசொலி செல்வம் மற்றும் ‘தி இந்து’ என்.ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடத்திய போராட்டம் பொடா, டெஸ்மா சட்டங்களை திரும்பப் பெறக்கோரி நடத்திய போராட்டம் ஆகிய போராட்டங்களை நடத்தியதற்காக கைதானார். 2004ம் ஆண்டு ஜெயலலிதா அரசை கண்டித்து போராட்டம் செய்து கைதானார்.

2003ம் ஆண்டு திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியில் அமர்த்தப்பட்ட ஸ்டாலின், 2008ம் ஆண்டு கழகத்தின் பொருளாளர் பொறுப்பேற்றார். 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் 2009ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் துணை முதலைமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ-வான ஸ்டாலின், 2011ம் ஆண்டு சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு, அந்த தொகுதியின் முதல் எம்.எல்.ஏ-வாக தேர்வானார்.

2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்வானார். திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடமுடியாமல் ஒதுங்கியதையடுத்து 2017ம் ஆண்டு திமுகவின் செயல் தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின், கருணாநிதியின் மறைவிற்கு பிறகு, 2018ம் ஆண்டு திமுக தலைவர் ஆனார். 

திமுகவின் (முன்னாள்) தலைவரும், தமிழக அரசியலின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், தனது தந்தையுமான மு.கருணாநிதியின் உடலை சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதிக்காததால் கலங்கிப்போன ஸ்டாலின், சட்டப்போராட்டம் நடத்தி, கருணாநிதியின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்யலாம் என்ற தீர்ப்பை பெற்றபோது, ஸ்டாலின் ஒரு மகனாக உடைந்து அழுத சம்பவம் தமிழ் மக்கள் மற்றும் திமுகவினரின் கண்களில் இன்றும் மறையாமல் இருக்கிறது.

2016-2021 அதிமுக ஆட்சிக்காலத்தின்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம்(2016), ஜல்லிக்கட்டு போராட்டம்(2017), திருவாரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய போராட்டம்(2017) என மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடிவந்த மு.க.ஸ்டாலின், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று பெரும்பான்மையை பெற்றதையடுத்து, முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.