இன்னும் தேர்தலுக்கு பல மாதங்கள் இருக்கின்றன. ஆனால், அதற்குள் ஆட்சிக்கு வந்துவிட்டது போல் கெத்து காட்டுகிறார்கள் சில திமுக உ.பி.,க்கள். 10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாததால் திமுகவினர் பலரும் ’பசையிழந்து’ போயிருப்பது மறுக்க முடியாத உண்மை. இந்தநிலையில் ஆட்சி கைக்கு வந்துவிட்டால் ‘காய்ந்த மாடு கம்பன் கொல்லையில் புகுந்த மாதிரி’ வகை தொகையில்லாமல் அள்ளிக்குவிக்க பலரும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய மாவட்டம் ஒன்றைச் சேர்ந்த திமுக புள்ளி அவர். சமீபத்தில் ஒரு பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசினார். ‘’முடியுமா, முடியாதா?’’என எடுத்த எடுப்பிலேயே எகிற, ஆட்சியர் பிரச்சனை தொடர்பான சிக்கல்களை எடுத்துக் கூறியிருக்கிறார். அதை கொஞ்சமும் காதில் வாங்காத திமுக புள்ளி, ’’ரூல்ஸையெல்லாம் தூக்கி குப்பையில் போடுங்க. இந்த விஷயத்தை செஞ்சி தரலைண்ணா அடுத்த எங்க ஆட்சியில் முதல் டிரான்ஸ்பர் உங்களுக்குத்தான்’’என பகிரங்கமாக எச்சரித்திருக்கிறார்.

இது ஒரு சின்ன உதாரணம்தான். இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிகாரிகளை திமுகவினர் மிரட்டுவது தொடர்கதையாகி வருகிறது. இது பற்றி திமுகவினர், ’’பத்து வருஷம் எதிர்க் கட்சியாக இருக்கிறோம். அதிலும் ஸ்டாலின் தலைவரான பிறகு கட்சி நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்திட்டு வருகிறோம். இதற்கெல்லாம் தலைமையிலிருந்து பத்து பைசா கூட தரவில்லை. சொந்த பணத்தை செலவழித்து இப்போ ஓட்டாண்டியா நிற்கிறோம். ஆட்சி கைக்கு வந்தால் போட்ட பணத்தை எடுக்கத்தானே செய்வோம். அதில் என்ன தப்பிருக்கிறது?’’ என்கிறார்கள்.

திமுகவினரின் இந்த அகோரப் பசி குறித்து கட்சி சாராத நடுநிலையாளர்கள் சிலரிடம் கேட்டபோது. ‘’திமுகவுக்கு எதிரி வேறு யாருமல்ல. அந்தக் கட்சியினரேதான். வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்து திமுக ஆட்சிக்கு வருமா அப்படிங்கறதே சந்தேகமாக இருக்குது. ஆனால் அந்தக் கட்சிக்காரர்கள் பலரும் இப்பவே ஆட்சியை பிடித்துவிட்ட மாதிரி ஆட்டம் போடறாங்க. இதையெல்லாம் பார்க்கிறப்போ கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் நடந்த வரலாறு காணாத நில அபகரிப்பு உள்ளிட்ட அதிகார அத்துமீறல்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. தப்பித்தவறி இந்தமுறை திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இந்த மாதிரி நடக்கும் என்பதற்கான அறிகுறிகளாகத்தான் இப்போதைய சம்பவங்களை பார்க்க வேண்டியிருக்கிறது.

இதையெல்லாம் ஸ்டாலின் கட்டுப்படுத்துவாரா அப்படிங்கறது கேள்விக்குறிதான். ஜனங்க எல்லாவற்றையும் கவனிச்சிகிட்டுதான் இருக்கிறாங்க. மொத்தத்தில் திமுகவினர் தங்கள் தலையிலேயே தாங்களே மண்ணை அள்ளிப் போடற மாதிரிதான் தெரியுது’’என்றார்கள்.