திருமங்கலம் பார்முலா என ஒன்றை உருவாக்கி, இடைத்தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பு முனையை ஏற்ப்படுத்திய பெருமை திமுகவையே சாரும்.

ஆனால், ஆர்.கே.நகர் இடை தேர்தலில், தினகரன் வாக்கு சேகரிப்பு உத்திகளை எதிர்கொள்ள முடியாமல் ஆங்காங்கே திணறி வருகிறது திமுக.

தினகரன் வரைந்துள்ள கோட்டை அழிக்காமல், அருகில் ஒரு பெரிய கோட்டை வரைந்து, அதை சிறியதாக மாற்ற அனைத்து வசதிகளும் திமுகவிடம் உள்ளது. ஆனால் அதற்கான மனம்தான் இல்லை.

அதனால், தினகரன் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யும் விவரங்களை ஆதாரங்களுடன், பொதுக்கூட்டத்தில் வெளியிட்டு சர்ச்சையை உருவாக்க திட்டமிட்டுள்ளது திமுக.

அதற்காக, ஸ்டாலின் வீட்டில் தினமும் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. மருமகன் சபரீசன், அன்பில் மகேஷ் ஆகிய இருவரும் ஆலோசனையில் தவறாமல் பங்கேற்கிறார்கள். 

தேர்தல் முடியும் வரை, தினகரன் பணம் கொடுப்பதையே திரும்ப, திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும், அதற்கான ஆதாரங்களை திரட்டிக்கொண்டு இருக்கவேண்டும் என்பதே திமுகவின் உத்தி.

அதையே திமுகவினரிடம் வலியுறுத்தி வரும் ஸ்டாலின், இன்று ஆர்.கே.நகரில் நடக்கும் திமுக பொது கூட்டத்தில், அதற்கான ஆதாரங்களை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. 

அதற்கான பின்னணி வேலைகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் திமுகவினர் கூறுகின்றனர்.