வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பொறுப்பாளர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்க குழு ஒன்றை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அமைக்க இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள். எம்.பி.க்கள், நிர்வாகிகள் என மெகா குழுவை மு.க. ஸ்டாலின் அமைத்துள்ளார். தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடப்பதால் எம்.எல்.ஏ.க்களும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடப்பதால் எம்.பி.களும் தேர்தல் பணியில் ஈடுபட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


ஆனால், பெரும்பாலான திமுக நிர்வாகிகள் வேலூர் தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனை முடிந்த பிறாகு செல்லலாம் என்ற நினைப்பில் இருந்தார்கள். ஆனால்,  ‘அனைவரும் உடனே வேலூர் செல்ல வேண்டும்' என ஸ்டாலின் உத்தரவிட்டதால் வேலூரில் திமுக நிர்வாகிகள் குவிந்துவருகிறார்கள். இத்தேர்தலில் வெற்றி பெறுவதை திமுக கெளரவ குறைச்சலாகப் பார்ப்பதால் தேர்தல் வியூகங்களை மு.க. ஸ்டாலினே நேரடியாக வகுத்து தருவதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், இந்த ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாக வேண்டும் என நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே தேர்தல் பணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திமுக நிர்வாகிகள் வெற்றிக்காக வியூகம் அமைத்து செயல்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் தேர்தல் வழக்கமான இடைத்தேர்ல் பாணியில் நடைபெறும் என்பதால், ஆளுங்கட்சி வெற்றி பெற எல்லா வேலைகளையும் செய்யும் என்பதையும் நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எடுத்துச் சொல்லியுள்ளார். தேர்தல் பொறுப்பாளர்கள் சரிவர வேலை செய்யவில்லை என்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், இதை வைத்தே அரசியல் செய்வார்கள் என்பதால், திமுக நிர்வாகிகள் கவனமாகவும் பொறுப்பாகவும் கடுமையாகவும் தேர்தல் பணியில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறுகிறார்கள் திமுகவினர்.  வேலூரில் தேர்தல் பணிகள் சரியாக திட்டமிட்டப்படி நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க தனியாகவும் ஒரு குழுவை ஸ்டாலின் நியமிக்க இருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.