நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக மண்டல வாரியாக கட்சியை பலப்படுத்தும் பணிகளை திமுக தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களை மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு என 4 மண்டலங்களாகவும் சென்னை தனி மண்டலமாக  பிரித்து மண்டலவாரியாக மாவட்ட, நகர, பேரூர்கழக நிர்வாகிகளோடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலந்துரையாடலுக்கு திட்டமிடப்பட்டது. அதன்படி மேற்கு, தெற்கு மண்டலத்திற்கான கலந்துரையாடல் கடந்த வாரம் நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் திருச்சி   ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் தற்போது நடைபெற்று வரும் கூட்டத்திலும் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த திமுக நிர்வாகிகள்  இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில்  பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 

தேர்தல் நெருங்கும் நிலையில் மண்டல வாரியாக நிர்வாகிகளோடு நடைபெறும் கலந்துரையாடல் கூட்டம் முக்கியதுவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. மாவட்ட, நகர, பேரூர், பகுதி என தனித்தனியாக ஆலோசனை நடத்த கலைஞர் அரங்கில் உள்ள மேடையில் திரை அமைக்கப்பட்டு நிர்வாகிகளிடம் தொகுதி வாரியான பிரச்சனைகளை படிவம் கொடுத்து பூர்த்தி செய்து கொடுக்க வலியுறுத்தபட்டுள்ளனர். இன்று காலை  நடைபெற்று வரும் கிழக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் சுமார் 110 நபர்கள் கலந்து கொண்துள்ளனர், மேலும் பல்வேறு பணிகளை செய்து அனைத்து தொகுதியும் கைப்பற்ற உழைக்க இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது. 

இன்றோடு மூன்று மண்டல நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நிறைவடைய உள்ள நிலையில் நாளை வடக்கு  மண்டலத்திற்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெறவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.