மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக பிரமுகர் கிராம மக்களுக்கு பிரியாணி விருந்து வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  தேர்தல் நேரத்தில் அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என வாக்கு  கேட்டு வருபவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தொகுதி இருக்கும் திசையில் கூட  தலை வைத்து படுக்க மாட்டார்கள் ,  ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தங்கள் கிராம மக்களுக்கு பிரியாணி விருந்து வைத்து உபசரித்து இருக்கிறார் திமுக பிரமுகர் ஒருவர் ,   சமீபத்தில்  ஊரக உள்ளாட்சித்  தேர்தல் நடைபெற்றது அதில் திமுக அதிமுக சமமான அளவிற்கு வெற்றி பெற்று தங்களுக்கான செல்வாக்கை  தக்கவைத்துக் கொண்டுள்ளனர் . 

இந்நிலையில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்த முத்துப் பெருமாள் ,  பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில்  திமுக செயலாளராக உள்ளார், இவர் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டம் 22வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார் . அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் திருமாறன்  வெற்றி பெற்றார் .  வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் முத்து பெருமாள் தோல்வியடைந்தார் . ஆனால் அதில் துவண்டு விடாத முத்துப் பெருமாள் தோல்வியடைந்த மறுநாளே  அந்தந்த கிராமங்களுக்குச் சென்று தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி கூறினார் .  அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு பிரியாணி விருந்து வைப்பேன் என்று அப்போது அவர் தெரிவித்திருந்தார் .  அதன்படி பெரியப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பெரியாண்டி குழி  கிராமத்தில் நேற்று முன்தினம் அவர் ஊர் விருந்து என்ற பெயரில் கிராம மக்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து வைத்தார் . 

அதில் சுமார்  500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விருந்து சாப்பிட்டனர் .  அப்போது தனக்கு வாக்களித்த அனைவருக்கும் முத்து பெருமாள் நன்றி கூறினார் .  அது குறித்து கூறிய அவர், தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தேன், ஆனாலும்  ஓட்டு எண்ணிக்கையின்போது  பெரியாண்டி கிராமத்தில் தான் எனக்கு அதிகம் பேர் எனக்கு வாக்களித்திருந்தனர் .  எனவே அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்தேன்,  இதனையடுத்து 25வது வார்டுக்கு உட்பட்ட கிராமங்களில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுக்கும் பிரியாணி விருந்து  வைப்பேன் என்றார் .  திமுக பிரமுகரின் இந்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.